தஞ்சை, ஏப். 6- என்னைப்பற்றி என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன் என்று தே.மு.திக. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் நடிகர் அருண்பாண்டியனை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பேராவூரணி தொகுதியில் உள்ள பெருமகளூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில்
பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லை. காவிரி பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை வசதி, குடிநீர் வசதிகளை ஜெயலலிதா நிவர்த்தி செய்வார்.
இந்த பகுதியிலும் அடிப்படை வசதி கிடையாது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இது நிவர்த்தி செய்யப்படும். தே.மு.தி.க. வேட்பாளரும் அதற்கு உறுதுணையாக இருப்பார்.
தி.மு.க.வினர் ஊர், ஊராக சென்று பொய் சொல்லி வருகிறார்கள். விஜயகாந்த் தனித்து நின்றால் அவர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். நான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருந்தால் கொண்டாடி இருப்பார்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் திண்டாடி வருகிறார்கள். என்னை தி.மு.க.வோடு கூட்டணி சேர்க்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் நான் அ.தி.மு.க.வோடு தான் கூட்டணி என்று கூறிவிட்டேன்.
ஒரு குழந்தை தவறு செய்தால் பெற்றோர்கள் அடிப்பார்கள். நான் தான் எனது உதவியாளரை தலையை பிடித்து உள்ளே தள்ளினேன். ஆனால் வேட்பாளரை அடித்தார் என்று பிரசாரம் செய்தனர். என்னைப்பற்றி பொய் பிரசாரம் செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். என்னை பற்றி என்ன பிரசாரம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால் எனக்கு சந்தோசம் தான். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டங்களில் விஜயகாந்த் பேசியதாவது:-
இந்த தொகுதியில் போட்டியிடும் சுப.தங்கவேலன் அமைச்சராக இருக்கிறார். ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதிக்கு என்ன அடிப்படை வசதிகளை செய்தார். கிராமம் தோறும் சாலைகள் உருக்குலைந்து காணப்படுகின்றன. கடலாடி தொகுதியில் போட்டியிட்டவர் இன்று திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை வீட்டுக்கு அனுப்புங்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குடிநீர் கொண்டுவந்து சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தார். கருணாநிதி 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார். அனைவருக்கும் கிடைத்ததா?
திருவாடானை தொகுதி மக்கள் அதற்கு தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர்ரஹ்மானுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி ஆட்சி அமைந்தால் குடிநீர் தட்டுப்பாடு, தடையில்லா மின்சாரம், மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு தமிழகம் ஒரு வளமையான பூங்காவனமாக, முதன்மை மாநிலமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக