தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.4.11

வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீச்சு; தி.மு.க.வினர் சாலை மறியல்


திருச்சி திருவானைக்காவலில் வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் திறந்த வேனில் நின்றபடி வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது அவரது பேச்சை கேட்க ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர்.
இந்த நிலையில் வேட்பாளரை ஆதரித்து பேசி முடித்ததும் வடிவேலு திறந்த வேனில் நின்றபடி மக்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு செருப்பு வடிவேலுவை நோக்கி வீசப்பட்டது. இந்த செருப்பு பிரசார வேனின் மீது மேல் பகுதியில் வந்து விழுந்தது. அடுத்து வீசப்பட்ட மற்றொரு செருப்பு பிரசார வேன் மீது பட்டு கீழே விழுந்தது. இதையடுத்து வடிவேலு பிரசார வேனின் உள்பகுதிக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரசார வேன் அடுத்த இடத்திற்கு புறப்பட்டு சென்றது.
வடிவேலு பிரசார வேன் மீது செருப்புகள் விழுந்ததை கண்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கொந்தளித்து போனார்கள். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசார வாகன அணிவகுப்பில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏறப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அந்தபகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் கூட்டத்தில் இருந்து செருப்பு வீசியவரை போலீசார் பிடித்து சென்றனர். விசாரணையில் அவர் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. முன்னாள் நிர்வாகி மாசிலாமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாசிலாமணியை கைது செய்தனர்.
இந்த நிலையில் தே.மு.தி.க. நிர்வாகி தான் செருப்பு வீசியது என தெரிந்ததும் திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதி தே.மு.தி.க. அலுவலகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் பிளக்ஸ் போர்டுகளை ரோட்டில் போட்டு கிழித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தே.மு.தி.க.வினரும், அ.தி.மு.க.வை சேர்ந்த குமார் எம்.பி. மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பிரச்சினை உருவாகாமல் இருக்க திருவானைக்காவல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் வடிவேலு அடுத்த இடத்தில் பிரசாரம் செய்யும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கிராப்பட்டி, எ.புதூர் பகுதிகளில் போலீசார் கையில் கேமராவுடனும், துணை ராணுவ படையினரும், உயர்ந்த கட்டிடங்களின் மாடிகளிலும் போலீசார் நின்று கொண்டு கண்காணித்தனர். பிரசாரம் முடியும் வரை நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்: