தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.3.11

மொகாலியில் மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறது


மும்பை தாக்குதலுக்குப் பிறகு நிலவும் கடுமையான பிணக்குகளையும், போர் சூழலையும் முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக நாளை பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
இரு நாடுகளுக்கிடையேயான உறவில் நிலவும் இறுக்கமான சூழலை பாக்.பிரதமரின் வருகை தணியச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவுடனான முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் இந்தியாவை வெற்றிப் பெறச் செய்தது அவர்களல்லாவா?. 
இரு நாடுகளுக்கிடையேயான பனிப் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்திய பிரதமருக்கு வாய்ப்பை ஏற்படுத்தியது ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் வெற்றியாகும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான கிரிக்கெட் போட்டிகள் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் நடைபெறும் போருக்கு சமமான அந்தஸ்தை கடந்த காலங்களில் பெற்ற அனுபம் நமக்குண்டு. இது இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவுக்கு ஆரோக்கியமற்றதாகவும், களங்கமேற்படுத்துவதுமாகும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போன்ற பல்வேறு நாடுகளுக்கிடையேயான போட்டிகளும், ஒலிம்பிக்ஸ் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளும் உலக மக்களிடையே நல்லிணக்கத்தையும், பரஸ்பர ஒத்துழைப்பையும் அதிகரிக்கத்தான் உறுதுணையாக அமைய வேண்டும். ஆனால், வரம்புக் கடந்த தேசப் பற்றின் பெயரால் நடைபெறும் வாய்ச் சவாடல்களும், ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகளும் பெரும்பாலும் அவற்றிற்கு வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. ஆனால், இம்முறை மொகாலியில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி சமாதானம் மற்றும் நட்புறவுக்கு ஆலிவ் இலையாக மாறியுள்ளது.
போட்டியில் யார் வெற்றிப் பெற்றாலும் இரு தரப்பினருக்கும் அது மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டி மூலமாக மட்டும் தீர்க்க முடியக்கூடியதல்ல இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகள்.
பல வேளைகளில் இடியும், மழையும் போல போரும், தீவிரவாதமும் இரு நாடுகளின் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன. ஏகாதிபத்திய சக்திகளுடன் இவ்விருநாடுகளும் ஏற்படுத்தியுள்ள உறவின் காரணமாகத்தான் இப்பிரச்சனைகள் இன்றளவும் நிலவுவதை காண்கிறோம்.
இரு நாடுகளிடையே மோதல்களை உருவாக்கி பிரித்தாளும் ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளை சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகள் காலக்கட்டட்திற்கு பிறகும் இவ்விருநாடுகளும் புரிந்துக் கொள்ளாததுதான் துரதிர்ஷ்டவசமானதாகும். இரு நாடுகளின் ஆட்சியாளர்களால் இப்பிரச்சனைகளை தீர்க்க இதுவரை இயலவில்லை. ஒருவேளை, இனிவரும் காலங்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடனும், பொறுமையுடனும் பிரச்சனைகளை கையாண்டால் வரும் தலைமுறையினராவது நிம்மதியாக வாழ்வதற்கு சாத்தியமாகலாம்.
இப்பிராந்தியத்தை சர்வதேச ஆயுதப் போட்டியின் களமாக மாற்றுவதற்கான விருப்பம் யாருடையது என்பதை அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வரும் காலக்கட்டங்களில் இந்தியாவின் ஆயுத பிரயோகம் அதிகம்பீரமாக இருக்கும் என கூறியது அமெரிக்க தூதர்தாம். ஆதலால், தற்பொழுது நடைபெறும் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளும், அரசியல் ரீதியான சந்திப்புகளும் மேலும் பலனளிக்கும் வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் .
குட்டையைக் கலக்கிவிட்டு கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் ஏகாதிபத்திய வல்லூறுகளின் சதித்திட்டங்களையும் இரு நாட்டு மக்களும் அடையாளங்காண வேண்டும். அத்தகைய திட்டங்களை தோல்வியுறச் செய்யவேண்டும். காரணம், சமாதானம் இரு நாடுகளுக்கும் மிகவும் இன்றியமையாததாகும்.
அ.செய்யது அலீ.

0 கருத்துகள்: