தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.3.11

இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., கூட்டணி கிடையாது: வைகோ சுய புராணம்


தி.மு.க.,வையே ஜீவனாக, வாழ்வாக, உயிராக நினைத் திருந்தவன் நான். என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு, 1993ம் ஆண்டு தி.மு.க., விலிருந்து வெளியேற்றப் பட்டேன். இதனால், 1994ம் ஆண்டு ம.தி.மு.க., உதயமானது. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். வெறும், 316 ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வியடைந்தேன். 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.
அடுத்த ஆண்டு, நாங்கள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க.,
வந்தது. அந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை; அவர்கள் தான் எங்கள் அணிக்கு வந்தனர். 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி எங்கள் கட்சியை அவமதித்தார். 22 இடங்களுக்கு மேல் பெறுவதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை எனக் கூறினார். ஒட்டுமொத்தத் தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க, அந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்தோம்.
35 தொகுதிகளில் போட்டி யிட்டு, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஏழெட்டு தொகுதி களில், சொற்ப ஓட்டு களில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், நாங்கள் தனித்து வென்ற நகராட்சிகளிலேயே எங்களுக்கு குறைவான வார்டுகள் ஒதுக்கப்பட்டன; பொறுத்துக்கொண்டோம்.
எங்கள் எம்.எல்.ஏ., வீர.இளவரசன் இறந்த திருமங்கலம்தொகுதியை அ.தி.மு.க., வலியுறுத்திக் கேட்டது; விட்டுக்கொடுத்தோம். எங்கள் வேட்பாளர் வென்ற கம்பம் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக ஜெயலலிதா கூறினார்; ஏற்றுக் கொண்டோம். கொள்கைகளைத் தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் அ.தி.மு.க.,வுடன் அனுசரித்தே நடந்துகொண்டோம்.
இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன், எங்களை அல்லவா முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். சரி… புதிய கட்சிகள் வருகின்றன… நாம் தான் ஏற்கனவே இருக்கிறோமே என, அமைதி காத்தோம். தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த முதல் பேச்சுவார்த்தையில், “கடந்த முறை கொடுத்த 35 கொடுத்துவிடுங்கள்’ என்றோம். “நிறைய கட்சிகள் வருகின்றன; கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்றனர். அடுத்த முறை, 30 தொகுதி கேட்டோம். இன்னும் குறைக்கக் கூறினர்.
பிப்ரவரி 28ம் தேதி, “25 இடங்களாவது வேண்டும்’ என்றோம். மார்ச் 8ம் தேதி போயஸ் தோட்டத்திற்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில், “நீங்கள் ஆறு இடங்களில் தானே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அவற்றையே எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றனர். இதை என் தோழர்கள் வந்து சொன்னபோது, இதயத்தில் ஈட்டி பாய்ச்சியது போல இருந்தது. ஆனாலும், அமைதியாக இருந்தேன். மறுபக்கம், கம்யூனிஸ்டுகளுக்கு 10, மார்க்சிஸ்டுக்கு 12, இன்னொரு கட்சிக்கு 41 என, ஒதுக்கீடுகள் முடிந்தன. மார்ச் 12ம் தேதி, கூட்டணிகளுக்கு 74 தொகுதி ஒதுக்கியது போக, 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுவிட்டது.
அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அன்றே, தே.மு.தி.க., அலுவலகத் துக்குச் சென்றனர். அவர்கள் பேச்சு நடத்த வேண்டுமென்றால், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்?
மார்ச் 13ம் தேதி, அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து எங்களைத் தொடர்புகொண்டனர். எட்டு “சீட்’ ஒதுக்குவதாகக் கூறினர். நான் பதில் ஏதும் ஏதும் சொல்லவில்லை. மறு நாள் காலை, 11 மணிக்கு பன்னீர் செல்வமும், செங் கோட்டையனும் என் வீட்டுக்கு வந்தனர். அரை மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் புரியவில்லை. நேற்று ஒரு எண்ணிக்கையில் “சீட்’ தருவதாகக் கூறினார்களாம். அது கொடுக்க முடியாத நிலையாம். ஒன்றை குறைத்துக்கொண்டு ஏழு சீட் தான் தர முடியும் எனக் கூறுகின்றனர்’ என்றனர். “கூட்டணியை விட்டு வெளியே போ’ என்பதைத் தவிர, இதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்?
நான், “தேர்தலில் வெற்றி பெற்று, நல்ல பதவிகளுக்கு வாருங்கள்’ என வாழ்த்துச் சொல்லி அனுப்பிவிட்டேன். அதேசமயம், எங்களுக்கு 18 தொகுதி தருவதாகவும், 19 தொகுதி தருவதாகவும், வைகோ மறுக்கிறார் என்றும், அ.தி.மு.க., தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு தகவல்கள் தரப்பட்டன.
மார்ச் 15ம் தேதி இரவு, அ.தி.மு.க.,விலிருந்து பூங்குன்றன் தொடர்புகொண்டு, “அம்மா இரண்டு பேரை உங்களுடன் பேச்சு நடத்த அனுப்பி வைக்கிறார்’ என்று சொன்னார். வீட்டுக்கு வந்தவர்கள், ஒன்பது தொகுதிகள் தருவதாகக் கூறினர். “போயஸ் கார்டனுக்கு வாருங்கள்’ என்றனர். “நான் வரவில்லை. வந்தால் வாக்குவாதம் செய்ய வேண்டியதிருக்கும். மனச் சங்கடம் வந்துவிடும். நான் கேட்ட, 23 தொகுதிகளில் இரண்டு இடங்களை குறைத்துக்கொண்டு, 21 தொகுதிகள் கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், வருகிறேன்’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளில், இரண்டு கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு, 74 இடங்கள் போக, ம.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு முடியாத நிலையில், அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தால், ம.தி.மு.க.,வை பிடரியைப் பிடித்து, நெட்டித் தள்ளியது தவிர வேறென்ன? “இந்தப் பட்டியல், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேறு நபர்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தான் கூட்டணிக் கட்சிகள் கேட்ட சீட்டுகள் வழங்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது’ எனச் செய்திகள் வெளியாயின. பட்டியல் மாற்றப்பட்டது, கட்சியின் பொதுச் செயலருக்கே தெரியாது என்றால், அவர் செயல் இழந்துவிட்டாரா?
அவரை யாரும் ஆட்டிப் படைக்கின்றனரா? தொகுதி கொடுப்பதிலேயே இவருக்கு பங்கில்லை என்றால், இப்படிப் பட்டவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள். ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரின் மீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன். இவ்வாறு, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து நாங்கள் தூக்கியெறியப்பட்டோம்.
மார்ச் 19ம் தேதி, ம.தி.மு.க.,வின் உயர்மட்டக் கூட்டம் தாயகத்தில் நடந்தது. 56 நிர்வாகிகள் பேசினர். 48 பேர் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என்றனர். இரண்டு பேர் மட்டும், 20 தொகுதி வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றனர். ஆறு பேர், தேர்தலைப் புறக்கணிப்போம் என்றனர். அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் மட்டும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து அறிவித்தோம்.
காலம் சில படிப்பினையைத் தந்ததால் ஜெயலலிதா மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். அவரின் எதேச்சிகாரத்திலும், ஆணவத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; இனியும் ஏற்படாது. என் முடிவுக்கு வருத்தம் தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியது, அரசியல் ஆதாயம் கருதித் தான். அவர் எப்படிப்பட்டவர் என்று கணினியில் பணி செய்பவர்கள் முதல், கழனியில் வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.
மீண்டும் அ.தி.மு.க.,வுடன் சேர்வதற்கு, ம.தி.மு.க., ஒருபோதும் நினைக்காது. மக்கள் மத்தியில் ஜாதி, மத பேதம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ம.தி.மு.க., திகழ வேண்டும். தமிழகத்தை ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன், 10 ஆண்டுகளுக்கு முன் ம.தி.மு.க., தீர்மானம் போட்டது. இதே முடிவுடன் கட்சி மீண்டும் நடைபோட தற்போதைய சூழ்நிலை உருவாகியுள்ளது; இது, காலம் தந்த அருட்கொடை. அ.தி.மு.க.,விலிருந்து விலகியது, நாங்கள் விரும்பி எடுத்த முடிவல்ல; காலத்தால் ஏற்பட்ட முடிவு. இந்த முடிவில் ஒரு சதவீதம் கூட, மறு பரிசீலனை செய்ய இடம் கிடையாது. அ.தி.மு.க., கூட்டணியில் ம,தி.மு.க.,வுக்கு, 35 இடங்கள் கொடுத்தால் கூட மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. நன்றி: இமயம் “டிவி’
வைகோ பொதுச் செயலர், ம.தி.மு.க.,
இயற்பெயர் : வை.கோபால்சாமி
வயது : 67
சொந்த ஊர் : கலிங்கப்பட்டி, நெல்லை மாவட்டம்.
ஆரம்பகாலம் : தி.மு.க.,வின் முன்னணித் தளபதி
நிறுவனர் : மறுமலர்ச்சி தி.மு.க.,
ஆண்டு : 1994
பதவி : பொதுச் செயலர்
அனுபவம் : தொடர்ந்து 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.,
குறிப்பு : சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல்வாதிகளில், மிக அதிக காலம் சிறைவாசம் இருந்தவர்

0 கருத்துகள்: