தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.12

குஜராத் தேர்தல்: இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு!


அஹ்மதாபாத்:குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக நடக்கிறது.முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 87 தொகுதிகளில் மொத்தம் ஒரு கோடியே 81 லட்சத்து 77 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 95 லட்சத்து 75
ஆயிரத்து 278 பேர்; பெண்கள் 86லட்சத்து 2,557பேர்; திருநங்கைகள் 118 பேர். மொத்தம் 846 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். செளராஷ்டிரப் பகுதியில் 7 மாவட்டங்களில், 48 தொகுதிகளிலும், தெற்கு குஜராத் பகுதியில் 5 மாவட்டங்களில் 35 தொகுதிகளிலும், ஆமதாபாதில் 4 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த 87 தொகுதிகளிலும் பாஜக தன் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் 84 வேட்பாளர்களையும், கேஷுபாய் படேலின் குஜராத் பரிவர்தன் கட்சி (ஜிபிபி) 83 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது.
முக்கிய கட்சிகள் தவிர 126 இதர கட்சிகளும், 383 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.  நரேந்திர மோடிக்கு எதிராகக் கட்சி தொடங்கியுள்ள கேஷுபாய் படேலுக்கு ஆதரவு அதிகமிருப்பதகாகக் கருதப்படும் சுரேந்திரநகர், ராஜ்கோட், ஜாம்நகர், போர்பந்தர், அம்ரேலி, பாவ்நகர் உள்ளிட்ட தொகுதிகளை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
முதல்கட்ட வாக்குப்பதிவில், கேஷுபாய் படேல், சட்டப்பேரவைத் தலைவர் கண்பத் வாஸவா, பாஜக மாநில தலைவர் ஆர்.சி. பால்து, காங்கிரஸ் மாநில தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, எதிர்க்கட்சித் தலைவர் சக்திசின் கோகில் உள்பட மாநில அமைச்சர்களின் விதியும் நிர்ணயிக்கப்படவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் தரப்பில் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜக தரப்பில் மோடி தவிர, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நவஜோத்சிங் சித்து, பரேஷ் ராவல், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நன்றி:தூது ஆன்லைன்

0 கருத்துகள்: