தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.10.12

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி


சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும்  நிகழ்ச்சியில் கடந்த  இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார். இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். இது பற்றி கூறப்படுவதாவது:மர்ஸூகா
அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான அவருக்கு இறந்துபட்ட மகனும், மூன்று மகள்களும் (அவர்களில் ஒருவர் முழுமையாக வாத நோயால் தாக்கப்பட்டுச் செயலற்றவர்), வாதநோயால் பாதிக்கப்பட்ட வயதான தந்தையும் உண்டு.  வாழ்வாதாரமாக, மறைந்த கணவர் பெயரில் மாதந்தோறும் அரசு அளிக்கும் ஓய்வூதியம் சுமார் 2000 ரியால்களும் சவூதி சமூகக் காப்பீட்டு நிறுவனம் மாதந்தோறும் அளிக்கும்  1000 சவூதி ரியால்களுமாக இவையே  வாழ்வை நகர்த்த உதவும் பொருளாதார ஊன்றுகோல்கள் அவருக்கு. சொந்தத்தில் வீடின்றி இளவரசர் சுல்தான் ஆதரவகம் ஒன்றில் தான் தங்கியுள்ளனர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மாலை நேரத்தில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக தன் மகனுக்காகக் காத்திருந்தார் மர்ஸூகா. ஆனால், மகன் வராமல், மகன் கொல்லப்பட்ட செய்தியே அவரை அடைந்தது.  ஒரே மகனை இழந்துவிட்ட இத்துயரையும் 'இறைவனின் நாட்டம்' என்று எளிதாகவே எடுத்துக்கொண்டார் அந்தத் தாய்.

அதன்பிறகு, கொலையாளி பிடிபட்டுவிட, தண்டனையும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு, கொலை செய்தவரின் குடும்பத்தினர் மர்ஸுகாவைத் தொடர்பு கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும்படியும், இரத்தப்பணமாக மில்லியன் கணக்கில் சொத்துகளும் பணமும் தருவதாகவும் கெஞ்சினர். கொலை செய்த இளைஞரின் தகப்பனார் பன்முறை கெஞ்சிப் பார்த்தும் தன் ஒரேமகனை பறிகொடுத்த அன்னைக்கு மன்னிக்க மனம் வரவில்லை. சுமார் 20 இலட்சம் ரியால்கள் மற்றும் சொத்துகளும் இறந்த மகனுக்கு ஈடாகாது என்றே அவர் எண்ணினார்.

இந்நிலையில், எதிர்பாராத ஒரு நாளில் நீதிமன்றம் சென்ற மர்ஸூகா தன் மகனைக் கொன்றவனைக் காண விரும்புவதாகக் கூறினார். அங்கே, அந்த இளைஞனைக் கண்டவருக்கு தன் மகனின் நினைவு வந்திருக்க வேண்டும், "உன் பணமோ, சொத்துகளோ வேண்டாம், அவை பெரிதில்லை, அல்லாஹ்வுக்காக உன்னை எந்த நிபந்தனையுமில்லாமல் மன்னிக்கிறேன்" என்றார் மர்ஸூகா. இதைக் கேட்ட அனைவருக்கும் ஆனந்த ஆச்சரியம்.  மர்ஸூகாவின் மன்னிப்பு உடனடியாக நீதிபதி முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

நிபந்தனையற்ற மன்னிப்பைப் பெற்ற அந்த இளைஞனுக்கு சொல்ல முடியாத பெரும் ஆச்சரியம். நன்றி சொல்லவும் நா எழவில்லை. நிபந்தனையற்று தன்னை மன்னித்து இறையருளுக்குப் பாத்திரமான அந்தத் தாயை தானும் இப்போதுமுதல் தாயாக ஏற்பதாகவும், அவருடைய வாழ்நாள் முழுதும் அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புவதாகவும் இதுவே தான் செலுத்தக்கூடிய பிரதியுபகாரமாக இருக்கும் " என்றும் அந்த இளைஞன் கூறியுள்ளார்.

சவூதியின் தபூக் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பணத்தைப் பெரிதாகக் கருதாத அந்த மனிதாபிமான தாயை சவூதி ஊடகங்களும், மக்களும் மிகவும் பாராட்டினர்.

0 கருத்துகள்: