தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.12

லண்டன் ஒலிம்பிக் : சில சுவாரஷ்யமான நினைவு குறிப்புக்கள்

கடந்த ஜூலை 27ம் திகதி தொடக்கம் பெற்று  ஆகஸ் டு 12ம் திகதியுடன் முடிவுக்கு வந்த லண்டன் ஒலிம் பிக்கில் நடைபெற்ற சில சுவாரஷ்யமான நினைவு குறிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோ ம்.இப்பதிவு 4தமிழ்மீடியாவுக்காக எழுதப்பட்டுள்ள தால் மீள்பதிவு செய்வோர் அனுமதி பெறுமாறு கோ ருகிறோம். - 4தமிழ்மீடியா குழுமம்1. எக்காலத்திலு ம் உலகின் மிகச்சிறந்த ஒலிம்பிக் சாம்பியனாக மைக்கெல் பிலிப்ஸ் அமெரிக்காவின் நட்சத்திர நீ ச்சல் வீரர் மைக்கெல் பிலிப்ஸ், இம்முறை லண்டன் ஒலிம்பிக்கில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்றார். கடந்த  பீஜிங், அதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 16 பதக்கங்கள் வென்றிருந்ததால், இம்முறை பெற்றதையும் சேர்த்து மொத்தம் 22 பதக்கங்களை பெற்றுள்ளார்.  இவற்றில் 18 தங்கப்பதக்கங்கள் அடக்கம். ஒலிம்பிக் போட்டிகளில் தனி வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய பதக்கங்கள் இவையாகும்.

இம்முறை நீச்சல் போட்டிகளின் 4x100 ரிலேயில் தனது அதிவேக நீச்சல் திறமையினால் அமெரிக்க அணி தங்கப்பதக்கம் வெல்ல காரணமானார். அதன் பின்னர் நடைபெற்ற பதக்கமளிப்பு விழாவின் போது நீச்சல் நடுவர்கள், மைக்கெல் பிலிப்ஸை, எக்காலத்திலும் உலகின் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீரர் என வாழ்த்தினர்.

2. வாழும் ஜாம்பவானாக உசைன் போல்ட்

100மீ, 200மீ, 4x100 மீ ரிலே என மூன்று ஓட்டப்போட்டிகளில் அடுத்தடுத்து இரு ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்ற முதல் விளையாட்டு வீரராக ஜமேக்காவின் உசைன் போல்ட் புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் உலகின் அதிவேக மின்னல் ஓட்ட வீரர் நானே என மீண்டும் நிரூபித்துக்கொண்டார். சர்வதேச ஒலிம்பிக் வாரியத்தின் தலைவர் ஜேக்ஸ் ரோகே, உசைன் போல்ட்டை வாழும் ஜாம்பவான் (Living Legend) எனும் அடைமொழிச்சொல்லால் அழைத்து மரியாதை செலுத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 6 தங்கப்பதக்கங்கள் பெற்று, எல்லா நேரத்திலும் மிகச்சிறந்த Sprinter எனும் பெருமையையும் உசைன் போல்ட் பெற்றார்.
உசைன் போல்டின் வெற்றி குறிப்பை இமிடேட் செய்யும் பிரான்ஸ் வீரர்கள்
3. Gabby : பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்கில் கலக்கிய இளம் பெண்

16 வயது மட்டுமே கொண்ட கேப்ரியல் டௌக்ளஸ், பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்கில் இரு தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், மகளீருக்கான ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி தங்கப்பதக்கம் வெல்ல காரணமானவர். 1996ம் ஆண்டுக்கு பிறகு மகளீருக்கான ஜிம்னாஸ்டிக்கில் அமெரிக்கா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.
பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் ஆல்ரவுண்டர் பிரிவில் அமெரிக்காவுக்கு தங்கம் வென்று கொடுத்த முதல் ஆபிரிக்க - அமெரிக்க இனத்தவரும் இவர் ஆவார். மின்சாரம் பாய்வது போல் இயங்குதிறன், மிக கச்சிதமாக உடலை சமநிலைப்படுத்தும் தன்மை, நேர்த்தியான உடல் வாகு என்பன இப்பெண் O2 அரீனாவில் ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருந்த போது ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.
4. பிரித்தானியாவுக்கு தங்க இரவு
மோ ஃபாராஹ்
கடந்த ஆகஸ்டு 4ம் திகதி ஒலிம்பிக் போட்டிகளின் போது 44 நிமிடத்திற்குள் ஒலிம்பிக் மைதானத்தில் மூன்று பிரித்தானிய வீரர்கள் அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்றனர். நீளம் பாய்தலில் கிரேக் ருதெர்ஃபோர்ட், 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் மோ ஃபராஹ், (சோமாலியாவை பூர்வீகமாக கொண்ட இவர், சனிக்கிழமை நடந்த 5000 மீற்றர் இறுதி ஓட்டப்போட்டியிலும் பிரித்தானியாவுக்கு தங்கம் வென்றார்), ஹெப்தலத்லோனில் ஜெஸிகா எனிஸ் என மூவரும் பிரித்தானியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்தனர். எனினும் அன்றைய நாள் முடிவதற்குள், ரோவர்ஸில் இரு தங்கப்பதக்கமும், பெண்களுக்கான டிரேக் சைக்கிலிளிங்கில் ஒரு தங்கப்பதக்கமும் பிரித்தானியாவுக்கு கிடைத்தது. அன்று பிரித்தானியா சுவீகரித்த மொத்த தங்கப்பதக்கம் 6. இதனாலேயே அன்றைய இரவு பிரித்தனையாவுக்கு தங்க இரவு என வர்ணிக்கப்பட்டது.

5. பேட்மிண்டனில் நடந்த வரலாற்றுச் சோகம்
தோற்பதற்காக விளையாடியதால் வந்த வினை. உலகின் மிக வேகமான பேட்மிண்டன் ஜோடி என வர்ணிக்கப்படும் சீன ஜோடி இருவரும், தென்கொரியா, இந்தோனேசியாவை சேர்ந்த சில வீராங்கணைகளும் ஒலிம்பிக்கிலிருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டனர். காலிறுதியில் இலகுவான அணிகளை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் அதற்கு முதல் போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடைந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

6. ஒலிம்பிக்கில் கர்ஜித்த Blade Runner

ஒஸ்கார் பிஸ்டோரியஸ் (Oscar Pistorius) தெ.ஆபிரிக்காவிலிருந்து - லண்டன் ஒலிம்பிக்கிற்கு பல்வேறு தடைகளை தாண்டி வெற்றிகரமாக பயணம் செய்த வீரர் இவர். இரண்டு கால்களும் இல்லாத போதும் கார்பன் - ஃபிபர் பிளேட்கள் பொருத்தப்பட்ட கால்களுடன், பரா ஒலிம்பிக்கில் இல்லாது நேரடியாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொண்டவர். இவர் மீதுள்ள கரிசணையால் அல்ல. தகுதி சுற்று போட்டிகளில் நிஜமாகவே சக வீரர்களை விட வேகமாக ஓடி, 4x400 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு பங்கேற்கும் தெ.ஆபிரிக்க அணியில் இடம்பிடித்தவர்.

அன்றைய போட்டியில் தெ.ஆபிரிக்க அணி கடைசி இடத்தையே பிடித்துக்கொண்ட போதும், ஒஸ்கார் 8வது இறுதியாகவே ஓடி வந்த போதும், ஒலிம்பிக்கின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வரை அவர் மேற்கொண்ட விடா முயற்சிக்கு கௌரவமளித்து அரங்கில் மிக நீண்ட நேரத்திற்கு கரகோஷம் ஒலித்தது. ஆனால் அன்றைய தோல்விக்கு அவர் காரணமல்ல. அவருக்கு முதல் ஓடிய தெ.ஆபிரிக்க வீரர்கள் வேகமெடுக்க தவறியிருந்தார்கள்.

7. பெண்களுக்கான பாக்ஸிங் : ஹிட்

சிவப்பு நிற அங்கியுடன் கிளாரெஸா ஷீல்ட்
முதன்முறையாக பெண்களுக்கான பாக்ஸிங் இம்முறை ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று பெண்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். மிடில்வெயிட் எடைப்பிரிவில் 17 வயது அமெரிக்க வீராங்கணை, கிளாரெஸா ஷீல்ட் தங்கம் வென்றார். லையிட் வெயிட் எடைப்பிரிவில் அயர்லாந்தின் டெய்லர் தங்கம் வென்று அயர்லாந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். பிளைவெய்ட் எடை பிரிவில் பிரித்தானியாவின் நிகோலாஸ் அடம்ஸ், அந்நாட்டுக்கு இப்பிரிவில் முதலாவது தங்கத்தை வென்றார்.

8. முறிந்த காலுடன் ஓடிய வீரர்

தகுதிச்சுற்றுக்கு முன்னைய 4x400 ரிலே ஓட்டப்போட்டியில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்றிருந்த போது, ஓட்டட்தை தொடக்கிய அமெரிக்க வீரர் மண்டோ மிட்செல் 200 மீற்றர் தூரம் ஓடிய போது இடது காலில் முறிவு ஏற்பட்டது. பாதியில் நிறுத்தினால் அமெரிக்கா, தகுதிச்சுற்றிலிருந்து வெளியேறிவிடும் நிலை தோன்றும் என சட்டென ஊகித்த அவர் முறிந்த கால்களுடன் ஓடி தனது லேப்பை முடித்துக்கொண்டு சக வீரருக்கு ரிலே கட்டையை கொடுத்தார். இறுதிச்சுற்றுவரை அமெரிகக முன்னேறி சில்வர் பதக்கத்தை வெல்வதற்கு மண்டோ மிட்செலின் சமயோசிதமான அர்ப்பணிப்பும் ஒரு காரணம்.

9. அரேபிய பெண்களுக்கு இது வரலாற்று ஒலிம்பிக்

சவூதி அரேபியாவிலிருந்து ஜூடோ போட்டிக்கு வந்து கலந்து கொண்ட இளம் வீராங்கணை Wojdan Ali Seraj Abdulrahim. சவுதி அரேபியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் வீராங்கணையும் இவரே. 82 நிமிடங்கள் மாத்திரமே இவர் களத்தில் நீடித்தார். புயெர்டோ ரிகோ நாட்டை சேர்ந்த வீராங்கணையிடம் மிக வேகமாக அவர் தோல்வி அடைந்த போதும், நவீன ஹிஜாப் அணிந்து அவர் போட்டியில் தைரியமாக கலந்து கொண்டது பெரும் வரவேற்பை பெற்றது. மில்லியன் கணக்கான சவுதி பெண்களின் பிரதிநிதியாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமையில் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்துள்ளார் அப்துல் ராஹிம் என்றார் சவுதி அரேபிய விளையாட்டு ரசிகர் ஒருவர்.

கட்டார், புரூனை ஆகிய நாடுகளும் முதன்முறையாக இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெண்களை அனுப்பிவைத்தன.

10. முதன்முறையாக கமெரா முன் நடித்த எலிசபெத் மகாராணியார்

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படத்தில், பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜேம்ஸ் போண்ட் நடிகர் டானியல் கிரே, புகிங்ஹாம் அரண்மையிலிருந்து எலிசபெத் மகாராணியாரை ஒலிம்பிக் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் அழைத்து வருவது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.  அப்போது 'Good Evening, Mr. Bond' என கூறுவார் எலிசபெத் மகாராணியார். அடுத்த காட்சிகளில் ஹெலிகாப்டரிலிருந்து மகாராணியார் மைதானத்திற்கு பரசூட்டில் குதிப்பது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

11. இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது அமெரிக்கா
46 தங்கம், 29 சில்வர், 29 வெண்கலம் உட்பட மொத்தம் 104 பதக்கங்களை அமெரிக்கா பெற்றது. 38 தங்கம், 27 வெள்ளி, 22 வெண்கலம் உட்பட மொத்தம் 87 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 29 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 65 பதக்கங்கள் பெற்று பிரித்தானியா மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 6 பதக்கங்களுடன் இந்தியா 55வது இடத்தை பிடித்தது. இம்முறையே இந்தியா ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை பெற்றுக்கொண்டது.

12. உலகின் மிகப்பெரிய பார்ட்டியாக மாறியது ஒலிம்பிக் நிறைவு விழா
Spice Girls
ஒலிம்பிக் நிறைவு விழாவில் பிரித்தானியாவின் வெவ்வேறு தசாப்தங்களில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள், George Michael, Tinie Tempah, Kate Moss, Naomi Campbell, The Spice Girls உட்பட பலரது இசை நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெற்றன. ஒவ்வொரு இசைக்கலைஞர்களும், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தலைமுறை ரசிகர்களை கவர்ந்திருந்ததால், அந்தந்த நேரங்களில் மைதானத்தில் அவர்கள் இசையமைக்க தொடங்கியதும், அவர்களுக்கு உரிய ரசிகர்கள் கூட்டம் உற்சாக கரகோஷத்துடன், அவர்களுக்கு பிடித்த பாடல்களையும் முணுமுணுக்க தொடங்கினர். பிரித்தானியா இசையுலகம் எப்படி உலக மயமாக்கலில் கலந்துள்ளது. எப்படி உலகம் முழுக்க ரசிகர்களை சம்பாதித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டவே நேற்றைய இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றன என லண்டன் ஒலிம்பிக்கின் கலை இயக்குனர் கின் கெவின் தெரிவித்தார்.

14. 135 தடவை நடைபெற்ற ஒத்திகை நிகழ்வு
லண்டன் ஒலிம்பிக்கின் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழாக்களுக்காக மொத்தம் 3,500 பேர் 60 மணிநேரத்திற்கு மேலாக ஒத்திகை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 135 தடவை ஒத்திகை நிகழ்வு பார்க்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள 10 பாடசாலைகளில், வார இறுதி தினங்களிலும், வார நாட்களில் மாலை நேரங்களிலும் இந்த ஒத்திகை நிகழ்வுகள் நடந்துள்ளன.
நன்றி- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

0 கருத்துகள்: