புதுடெல்லி:இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது.இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிஜேபி மற்றும் ஒருசில கட்சிகளின் ஆதரவோடு முன்னாள் மக்களவை ச
பாநாயகர் பி.ஏ. சங்மாவும் போட்டியிட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணி காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதலில் மாநில சட்டமன்றங்களில் வாக்களித்த எம்.பி.க்களின் வாக்குகள் தனியே பிரிக்கப்படும். இதனையடுத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் மாநில வாரியாக வகைப்படுத்தப்படும். அந்தந்த மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் கணக்கிடப்படும்.
வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்படும் தேர்தல் என்பதால், வாக்குச் சீட்டுகள் ஒவ்வொன்றாக கணக்கிடப்படும். இதன் மூலமே ஒரு வேட்பாளர் பெறும் வாக்கு மதிப்பு அறிவிக்கப்படும். ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணப் முகர்ஜிக்கு அதிக ஆதரவு இருப்பதால், அவரே வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பிரணப் முகர்ஜியை எதிர்த்து நிற்கும் பி.ஏ. சங்மா 30 சதவீதம் முதல் 38 சதவீதம் வரையிலான வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஜூலை 25 ஆம் தேதி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
நன்றி: தூதுஆன்லைன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக