"பலஸ்தீனுக்கு நல்வரவு - 2012" எனும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உலகெங்கிலும் உள்ள பலஸ்தீன் ஆதரவாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் முதலான பலருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.04.2012) மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளுமுகமாய் சுவிஸ், இத்தாலி, ஃபிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெய்ன், பெல்ஜியம், கனடா முதலான மேற்குலக நாடுகளில் இருந்து வருகைதந்த பிரமுகர்கள் பலர் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கடும் அழுத்தம் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இஸ்ரேல் சென்றடைய முற்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகளின் விமானச் சீட்டுக்கள் இஸ்ரேல் சார்பு விமான சேவை நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரிட்டன் விமான சேவையான ஜெட்-2, எயார் ஃபிரான்ஸ், சுவிஸ் எயார் என்பன டெல் அவிவ் செல்லவிருந்த பயணிகளின் பயணச் சீட்டுக்களை ரத்துச் செய்த சில விமான சேவைகளாகும்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு வாழும் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனர்களைச் சந்தித்துத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "பலஸ்தீனுக்கு நல்வரவு-2012" நிகழ்வில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மனித்நேயச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ள முன்வந்திருந்தனர்.
பலஸ்தீனத்துக்கு சர்வதேச அரங்கில் அமோகமான ஆதரவு பெருகி வருவதையும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கொடூரத்தை வெளி உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கி இருப்பதையும் உணர்ந்து கொண்டுள்ள இஸ்ரேல் திணறிப் போயுள்ளது. அதன் விளைவாகவே, தமது நாட்டுக்கு வருகை தரவிருந்த சர்வதேசப் பிரமுகர்கள் மற்றும் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்குள் நுழைவுரிமையைத் தடைசெய்து பயணிகளைத் திருப்பி அனுப்பிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம், "மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஒரு ஜனநாயக நாடு இஸ்ரேல் மட்டும்தான். அங்கேதான் ஆண்-பெண் சம உரிமைகள், அனைத்துமத நல்லிணக்கம், சிறுபான்மையினரின் அச்சுறுத்தலற்ற வாழ்வுரிமை என்பன உறுதியாகப் பேணப்பட்டு வருகின்றன. எனவே, இங்கு வந்து மனித உரிமைக்காகக் குரல்கொடுப்பதைவிட, ஈரான், சிரியா போன்ற நாடுகளில் நடந்தேறும் ரத்தக் களறிகளை நிறுத்தும் வழிவகைகளை முதலில் சிந்தியுங்கள். அவற்றுக்குத் தீர்வு கண்டுபிடித்த பின் இங்கே வாருங்கள்" எனக் கூறியுள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் சம்பவங்கள் யாவும், அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவோடு இஸ்ரேல் அரங்கேற்றிவரும் மனித உரிமை மீறல்கள், வன்கொடுமைகள், சட்டவிரோத நடவடிக்கைகளை சர்வதேச உலகு உற்று நோக்கியவண்ணமே உள்ளது என்பதையும், இனி இஸ்ரேலால் நீண்ட காலத்துக்கு தன்னுடைய அடாவடித்தனங்களை நியாயப்படுத்தி உலகின் முன் நாடகமாட முடியாது என்பதையுமே உறுதிப்படுத்துகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக