தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.5.11

தமிழகத்தில் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாகும் காங்.,


சோனியாவும், பிரதமரும், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், தி.மு.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், “நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும்’ என, ஜெயலலிதா கூறிய நாள் முதல், காங்கிரஸ் மீது, தி.மு.க.,வுக்கு இருந்த அதிருப்தி அதிகமாகியது.

தொகுதி பங்கீடு பிடிவாதத்தால், மத்திய அரசில் இருந்து விலக தி.மு.க., முடிவெடுத்தது. ஒரு சில சீட்டுக்காக கூட்டணியை முறிக்க காங்கிரசும் கொம்பு சீவியது. வேட்பாளர் தேர்வு நேரத்தில் அறிவாலயத்தில் உள்ள, “கலைஞர் டிவி’ அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு, கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை, ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றது என, அடுத்தடுத்த அஸ்திரங்கள் தி.மு.க., மீது வீசப்பட்டன. கருணாநிதியுடன் பிரசார மேடையை பிரதமர் மன்மோகன்சிங் தவிர்ப்பு, பிரசாரத்துக்கு தமிழகம் வந்த ராகுல், எப்போதும் போல் கருணாநிதியை சந்திக்காமல் சென்றது, தேர்தல் கமிஷனின் கெடுபிடி, கருணாநிதி உள்ளிட்டோருக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு. எம்.பி., ரித்திஷ் கைது, மத்திய அமைச்சர் அழகிரி உட்பட பல அமைச்சர்கள் வாகனம், அலுவலகத்தில் சோதனை, தி.மு.க.,வுக்கு சாதகமானவர்கள் என்ற அடிப்படையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் என, அஸ்திரங்கள் தொடர்ந்தன.
கோவை, ஈரோடு பிரசார கூட்டங்களில், “தமிழகத்தில் எமர்ஜென்சி நடப்பது போல உள்ளது’ என, கருணாநிதி கூறியதை பலரும், தேர்தல் கமிஷனை குறிப்பிடுகிறார் என்றே நினைத்தனர். ஆனால், அவர் மத்திய அரசைத்தான் அவ்வாறு சாடினார் என, தாமதமாகவே பலருக்கும் புரிந்தது. அதற்கேற்ப, பெரும்பாலான தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் உட்பட எந்த பணிக்கும் காங்கிரசார் அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை. காங்கிரஸ் தொகுதிகளில் தி.மு.க.,வும் கழன்று கொண்டது. கடைசியாக, இக்கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க ராகுல் விரும்பினார். ஆனால், சோனியாவின் முடிவால், தி.மு.க.,வுடன் கூட்டணியை காங்கிரஸ் தொடர்ந்தது. தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க., கூட்டணிக்கு காரணமான தங்கபாலுவை எதிர்த்து, அவரது கொடும்பாவியை, மாநிலம் முழுவதும் காங்கிரசார் எரித்தனர். இதன் மூலம், கூட்டணி குறித்த தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு, போன் மூலம் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் வாழ்த்து கூறியுள்ளனர். தி.மு.க., கூட்டணியால், தமிழகத்தையும், புதுச்சேரியையும் இழந்துள்ள காங்கிரஸ், தி.மு.க.,வில் இருந்து விலகி, அடுத்த நகர்வுக்கு ஆயத்தமாவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மத்திய அரசில் அங்கம் வகித்தால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் பிரச்னையை சந்திப்பது, அ.தி.மு.க., அரசை சமாளிப்பது எளிதாகும் என, தி.மு.க., விரும்பினாலும், காங்கிரஸ் ஒத்துழைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 கருத்துகள்: