தங்கள் நாட்டில் இதற்குமேலும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து
செயல்படுவதை மேலும் விரிவாக்குவது, பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவது குறித்து விவாதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் பாஷா, அமெரிக்கா இதற்கு மேலும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுடன் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிறுத்திவிட்டது.
பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்த தாங்கள் உதவியதாகவும், சி.ஐ.ஏ.வுக்கு தகவல்கள் அளித்ததாகவும் முன்பு கூறிவந்த ஐ.எஸ்.ஐ முகவர்கள், இப்போது பயங்கரவாதிகள் குறித்து சி.ஐ.ஏ.வுக்கு தகவல்கள் அளிக்க மறுத்துவருவதாக சண்டே டெலிகிராப் தெரிவித்துள்ளது.
அபோட்டாபாதில் மே 2ஆம் தேதி அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றனர். இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தானிடம் முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இதனால் கடும்கோபத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ, சி.ஐ.ஏ.வுடன் உள்ள உறவை துண்டித்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக