தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.9.12

குஜராத் இனப்படுகொலை: மோடியின் அமைச்சரைச் சிக்கவைத்த வாஜ்பாய்!


2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த நரோடாபாட்டியா படுகொலை வழக்கில் மோடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை கிடைப்பதற்கு அன்றைய பிரதமராக இருந்த பாஜக முன்னாள் தலைவர் வாஜ்பாய்த்தான் காரணமாக இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மோடியின் அமைச்சரவையில் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானி, நரோடா பாட்டியா படுகொலை சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய குற்றவாளி என்ற தீர்ப்பு மோடிக்குப் புதிய நெருக்கடியினையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சம்பவத்தில்,

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் பஜ்ரங்தள், வி.எச்.பி முதலான ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இருப்பினும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, வழக்கு பதிவு செய்யவோ மோடியின் அரசு முன்வராததோடு அவர்களுக்கு எதிராக புகார் கூறியவர்கள் மற்றும் சாட்சிகளை இல்லாமலாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது.

நரோடா பாட்டியா பகுதியில் நடந்த மதவெறியாட்டத்தில் மட்டும் 100 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர். இந்க கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் குஜராத் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சரும், 3 முறை எம்.எல்.ஏவுமான மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல முன்னாள் விஎச்பி தலைவர் பஜ்ரங்கியை அவரது வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது தீர்ப்பின்போது நீதிபதி ஜோத்சனா, அமைச்சர் மாயாவைக் காக்க மோடி அரசு தீவிரமாக பலவழிகளிலும் முயன்றதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இந்தப் படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

2002ம் ஆண்டுதான் மாயா கோத்னானி மோடியால் அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவருக்கு மகளிர் மற்றும் சிறார் நலத்துறை தரப்பட்டது. அதே சமயம், மாயா மற்றும் பாபு பஜ்ரங்கி வன்முறை கும்பலால் நரோடா பாட்டியா சம்பவத்தில் பெண்களும், குழந்தைகளும்தான் மிகப் பெரிய அளவில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு எதிரான தீர்ப்பில் நீதிபதி குறிப்பிடும்போது, "மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப்புகள் அனைத்தும் உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக் காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத்னானியின் பெயர் கூட இந்தச் சம்பவத்தில் வந்து விடாதபடி காக்க கடுமையாக முயன்றுள்ளனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, நரோடா பாட்டியா சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த நேரடி சாட்சிகள் புகார் தெரிவித்தும் குஜராத் மாநில காவல்துறையினர் பதிவு செய்த எப்ஐஆரில் மாயாவின் பெயர் சேரக்கப்படவில்லை. அமைச்சர் மாயாமீது வழக்குப் பதிவு செய்ய பலவழிகளிலும் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அப்போது குஜராத்தின் அனைத்து துறைகளும் அமைச்சர் மாயாவுக்குத் துணையாக இயங்கின. இறுதியில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினர் பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்து புகார் கூறினர்.
காவல்துறையினரும் குஜராத் அரசு இயந்திரமும் அமைச்சர் மாயாவைக் காக்க முயல்வதாக வாஜ்பாயிடமே அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாஜ்பாய் நேரடியாக தலையிட்டு சுமார் 27 புகார்கள் மாயாமீது பதிவுசெய்யப்பட உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாயாவின் பெயரைச் சேர்த்து ஒரு எப்ஐஆரை குஜராத் காவல்துறையினர் பதிவு செய்தனர். அதன் பின்னரே விஎச்பி தலைவர் ஜெய்தீப் படேல், நரோடா காவல்துறை ஆய்வாளர் மைசூர்வாலா ஆகியோரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டன.

நரோடாபாட்டியா படுகொலை சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் மாயா, பஜ்ரங்தள் முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி முதலானோரைப் பாதுகாக்க மோடியின் அரசு இயந்திரம் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த சமயத்தில், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் நேரடியாக தலையிட்டு அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்ய வைத்தார். இந்த வழக்குகளிலேயே தற்போது முன்னாள் அமைச்சர் மாயா மற்றும் பஜ்ரங்தள் முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
நன்றி: இன்நேரம்

0 கருத்துகள்: