நெல்லை:திருநெல்வேலி மாவட்ட தலைநகரான நெல்லையில் இறைத்தூதரை இழிவுப்படுத்திய அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நடந்த ரயில் முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டார் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதல்களில் ஏராளமானோர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து மேலப்பாளையம் பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்திலும் போலீசார்
தடியடி நடத்தியுள்ளனர்.
தடியடி நடத்தியுள்ளனர்.
இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையில் நேற்று மாலை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில தலைவர் பாளை ரஃபீக் தலைமையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் நோக்கி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். நாலாபுறமும் சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் மோட்டார் சைக்கிள்களை தாக்கி பஸ்கள் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. ஆனால், போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதலை நடத்தியதால் அவர்களை பாதுகாக்கவே போலீசாரின் கவனத்தை திசை திருப்ப வாகனங்களை தாக்கியதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். மேலும் போராட்டக்காரர்களை வன்முறையின் பக்கம் திசை திருப்பவே போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர் என்றும் இது திட்டமிட்ட சதி எனவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் 13 பேr படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் தங்களை தாக்கியதாக பொய் கூறி போலீசார் சிலர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்தியவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவத்தில் 18 பெண்கள் உள்பட 252 பேரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தடியடி சம்பவத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் நேற்று இரவு ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் காயமடைந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதுத்தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
போராட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீறி ரயில் நிலையத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்த முயன்றனர். இதனால் கலைந்து செல்ல எவ்வளவோ கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாரை தாக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்தவே லேசாக தடியடி நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் 6 பஸ்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தையடுத்து மீண்டும் மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலப்பாளையம் வழியே செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலை 9 மணி வரை மேலப்பாளையம் வழியே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாபநாசம் மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
தென்காசி-நெல்லை பஸ்கள் 8 மணிக்கு பிறகே இயக்கப்பட்டன. மேலப்பாளையம் பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ்கள் மீது கல்வீசி தாக்கியது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் அனைவரின் மீது கண்மூடித்தனமான போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் சார்பாக நெல்லை சந்திப்பில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த போலீஸ், முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். அதே வேளையில் போராட்டத்தில் கலந்துகொண்டோர் கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவில்லை.
போலீசாரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இதுத்தொடர்பாக தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது ஜனநாயக விரோத செயலாகும். எனவே தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார். நன்றி:தூது ஆன்லைன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக