நபிகள் நாயகத்தை தவறாக சித்திரித்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தை சமூக இணையதளமான யூ டியூபில் இருந்து நீக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், பல்வேறு நிலைகளில் பிரச்னைகளை சந்தித்து வருவதால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூ டியூபில் இருந்து நீக்க
வேண்டும் என்று கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கின் பிரதிவாதியாக கூகுள் மற்றும் யூ டியூப் இணைய தளங்களை சேர்த்துள்ளார். அந்த வழக்கில், வீரத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தன்னை நடிக்க வைப்பதாக தயாரிப்பாளர் கூறியதால் நடித்தேன். திரைப்படத் தயாரிப்பின்போது நபிகள் நாயகம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி லூயிஸ் லாவின், இந்தத் திரைப்படத்தை யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
நபிகள் நாயகத்தை தவறாக சித்திரித்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த திரைப்படத்தில் நடித்தவரே இதனை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக