தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.8.12

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கூண்டில் ஏறிய பிரதமர் பர்வேஸ் அஷ்ரப்.


அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை, மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்காததால், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், அனுப்பிய கோர்ட் அவமதிப்பு நோட்டீசை ஏற்று, அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், நேற்று கோர்ட்டில் ஆஜரானார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மூன்று வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க மறுத்த, முன்னாள் பிரதமர் கிலானிக்கு,

கோர்ட் அவமதிப்பு வழக்கில், அடையாள தண்டனை விதித்து, தகுதி இழப்பும் செய்து, பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, புதிய பிரதமராக பொறுப்பேற்ற, ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கும், சுப்ரீம் கோர்ட், கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட, பிரதமர் அஷ்ரப், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று நேரில் ஆஜரானார். இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், ஆஜராகும் இரண்டாவது பிரதமர் இவர்.

பிரதமர் அஷ்ரப், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடை சூழ, நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய "பெஞ்ச்' முன் நேற்று காலை ஆஜரானார். இதையொட்டி, சுப்ரீம்கோர்ட்டில், பாதுகாப்புக்காக, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்; ஹெலிகாப்டரில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோர்ட்டில், அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறிய பிரதமர் அஷ்ரப், "அதிபர் சர்தாரி மீதான வழக்குகளை, மீண்டும் விசாரிப்பது குறித்த பிரச்னையை இழுத்தடிக்க விரும்பவில்லை; விரைவில் தீர்வு காணவே விரும்புகிறேன். இதுசம்பந்தமாக முடிவெடுக்க சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்க, நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை கால அவகாசம் வழங்கவேண்டும்' எனக் கோரினார்.

இதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பதாகக் கூறினர். அப்போது குறுக்கிட்ட பிரதமர் அஷ்ரப், "செப்டம்பர் 14ம் தேதி வரை அரசு முறைப் பயணமாக சீனா செல்ல உள்ளேன். அதனால், விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்' என்றார். அத்துடன், தனக்கு அனுப்பப்பட்ட கோர்ட் அவமதிப்பு நோட்டீசை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், "கோர்ட்டில், ஆஜராகியிருப்பதால் மட்டும், நீதித்துறையை மதித்து விட்டதாகக் கூற முடியாது. கோர்ட் உத்தரவையும் அமல்படுத்த வேண்டும். பிரதமர், இந்த கோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்டவராக ஆஜராகவில்லை. நாட்டின் பிரதமர் என்ற முறையில் தான் ஆஜராகியிருக்கிறார்.

"வெளிநாடு செல்வதால், அதிபர் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பது குறித்து, சுவிட்சர்லாந்து நாட்டு அரசுக்கு கடிதம் எழுதும் பணியை, சட்ட அமைச்சரிடம் ஒப்படைக்கலாமே' எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பிரதமர் அஷ்ரப் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. உடனே நீதிபதிகள், "எந்த ஒரு உத்தரவாதமும் அளிக்காவிட்டால், சட்டம் தனது முடிவை எடுக்கும்' எனக் கூறி, விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினமும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்: