லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 204 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த மெகா விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். தொடக்க மூன்று நாட்களில் இந்தியாவுக்கு பெரிய அளவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை. அதிகமான தோல்விகளே வந்தன.
இந்த நிலையில் போட்டியின் 4-வது நாளான நேற்று இந்தியாவுக்கும், ரசிகர்களுக்கும் தித்திப்பூட்டும் நாளாக அமைந்தது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற வைத்தார்.
துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவு பந்தயம் நேற்று நடந்தது. 47 வீரர்கள் கலந்து கொண்ட தகுதி சுற்றில் இருந்து முதல் 8 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். நடப்பு சாம்பியன் அபினவ் பிந்த்ரா ஏமாற்றிய நிலையில், ககன் நரங் 3-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
நரங் இறுதி சுற்றுக்குள் நுழைந்ததும், தேசத்தின் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. இதனால் பலமான எதிர்பார்ப்பு, நெருக்கடிக்கு மத்தியில் இறுதிசுற்றில் களம் கண்ட அவர் மிகவும் கவனமுடன் இலக்கை குறி வைத்து சுட்டார். 10 ரவுண்ட் கொண்ட இறுதி சுற்றில் அவர் ஒரு கட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தை வெல்வது போல் முன்னேறினார். ஆனால் இறுதியில் அவரால் வெண்கலமே வெல்ல முடிந்தது.
ருமேனியா வீரர் மால்டோவினு அலி ஜார்ஜ் மொத்தம் 702.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தகுதி சுற்றில் முதலாவதாக வந்த உலகின் நம்பர் ஒன் வீரர் இத்தாலியின் நிக்கோலா கேம்பிரியாந்தி இறுதி சுற்றில் சிறிது தடுமாறியதால், வெள்ளிப்பதக்கத்துடன் (மொத்தம் 701.5 புள்ளி) திருப்திப்பட வேண்டியதாயிற்று.
தகுதி சுற்றில் 598 புள்ளிகளும், இறுதி சுற்றில் 103.1 புள்ளிகளும் என்று மொத்தம் 701.1 புள்ளிகள் சேர்த்து 3-வது இடத்தை பிடித்த ககன் நரங் வெண்கலப்பதக்கதை கைப்பற்றினார். சீனாவின் வாங் டாவ் 700.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்றார்.
இந்த லண்டன் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் ககன் நரங்க் தான். இதே போல் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்த பெருமையையும் அவரே பெற்றிருக்கிறார்.
29 வயதான ககன் நரங் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3-வது துப்பாக்கி சுடுதல் வீரர் ஆவார். இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் வெள்ளிப்பதக்கமும், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கமும் துப்பாக்கி சுடுதலில் வென்றிருக்கிறார்.
நூற்றாண்டு கால ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக்கில் இந்தியா பதிவு செய்த 21-வது பதக்கம் இதுவாகும். இதில் 11 குழு போட்டியிலும் (ஆக்கி), மீதமுள்ள 10 பதக்கம் தனிநபர் பிரிவிலும் கிடைத்தவை ஆகும்.
பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த ககன் நரங் பாராட்டு, பரிசு மழையில் நனைந்து வருகிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், `ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ககன் நரங்கை, நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் பாராட்டுகிறேன். எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் அவர் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.
இதே போல் ககன் நரங்கை வெகுவாக பாராட்டிய மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கான் அவருக்கு, இந்திய விளையாட்டு ஆணையத்தில் (சாய்) வேலை வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து அஜய் மக்கான் கூறுகையில், `ஒலிம்பிக்கில் பங்கேற்ற நமது வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஜெயிக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு `சாய்' அமைப்பில் அதிகாரி வேலை வழங்கப்படும். பதக்கம் வெல்வோர் நேரடியாக குரூப் ஏ அதிகாரியாக பதவி உயர்த்தப்படுவார்கள். இந்த பொறுப்பு ஐ.ஏ.எஸ். பதவிக்கு இணையானுது.' என்றார். ``ககன் நரங்கும், பிந்த்ராவும் இறுதி சுற்றுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிந்த்ராவினால் இறுதி சுற்றை எட்ட முடியவில்லை. இரண்டு இந்திய வீரர்கள் பதக்க மேடையில் ஏறியிருந்தால், பார்ப்பதற்கு இன்னும் சிறப்பான தருணமாக அமைந்திருக்கும்' என்றார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் 'டுவிட்டர்' இணையதளத்தில், 'லண்டன் ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கத்தை வென்று தேசத்தை பெருமைப்பட வைத்துள்ளீர்கள்' என்று நரங்கை பாராட்டியுள்ள அவர், இன்னும் நிறைய பேர் பதக்கம் வெல்வார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பதக்கம் வென்ற ககன் நரங்குக்கு ரூ.1 கோடி பரிசுத்தொதகை வழங்கப்படும் என்று ஹரியானா மாநில முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். ககன் நரங்கின் முன்னோர்கள் ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, சகாரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி 2 கிலோ தங்கப்பதக்கங்களும் ககன் நரங்குக்கு கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக