டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிரு ந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 32 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
எனினும், மின்சாரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
அதிகாலை சுமார் 4.20 மணிக்கு விபத்து ஏற்பட்டபோது, பெரும்பாலான பயணிகள் ஆழந்த உறக்கத்தில் இருந்ததாக நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே, ஓடும் ரயிலில் இருந்து சில பயணிகள் குதித்துவிட்டார்கள். மேலும், விபத்துக்குள்ளான எஸ் 11 பெட்டியில் இருந்து 28 பயணிகள் காயங்களுடன் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பெட்டி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. சிறப்புக் கருவிகளை வைத்துத்தான் அந்தப் பெட்டியை உடைக்க முடிந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களைக் காணவும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும் சென்னையில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் மருந்துகளையும் ஏற்றிக் கொண்டு சிறப்பு ரயில் இன்று காலை சென்னையில் இருந்து நெல்லூர் சென்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக