அந்த குடும்பத்தில் இருவர் பெந்தகோஸ்தேவில் சேர்ந்ததி லிருந்து இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண் டார்கள், ஒன்று பெந்தகோஸ்தே குழு, இன்னொன்று ஹிந் து குழு. எதற்கெடுத்தாலும் பிரச்சனை, சண்டை.‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரி யில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள் வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதி க்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம்
இவற்றால் குழந்தைக்கு ஜுரம் வந்திருக்கலாம்’ என்று நினைத்தேன். ஆனால் இந்த ஜுரத்திற்கு ஏசுவும் பெருமாளும் தான் காரணம் என்று தெரிய வந்த போது உறைந்து போனேன்.
பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழா விட்டாலும் அனைவரும் ஒரே ஊரில் வசிக்கிறார்கள். மூத்தமகள் ஒரு வருடத்திற்கு முன்பு பெந்தகோஸ்தெ எனும் கிறிஸ்துவ பிரிவில் சேர்ந்தார். அதை அப்போதே வீட்டிலிருப்பவர்கள் எதிர்த்து வந்தனர். 6 மாதத்திற்கு முன்பு மூன்றாவது பெண்ணும், மருமகளும் (மகனின் மனைவி) பெந்தகோஸ்தேவில் சேர்ந்து விட்டனர்.
அதிலிருந்து குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டார்கள், ஒன்று பெந்தகோஸ்தே குழு, இன்னொன்று ஹிந்து குழு. எதற்கெடுத்தாலும் பிரச்சனை, சண்டை.
வீட்டில் இருக்கும் வயதானவர்கள் ஹிந்து முறைப்படி சடங்கு, பூஜைகள் செய்ய வேண்டும் என்பார்கள். இல்லை, கிறிஸ்துவ முறைப்படி ஜபம் என்று பெந்தகோஸ்தே குழுவினர் மல்லு கட்டுவார்கள். குடும்பப் பிரச்ச்னைகள் தீர பல பிரார்த்தனைகள், பல யாகங்கள், பல ஜெப கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றாலும் அவை பிரச்சனையை இன்னும் பெரிதாக்கின. ஆண்டவனைத் தொழுதால் மனநிம்மதி என்பார்கள். இங்கோ கோவிலுக்கு போவதா, சர்ச்சிற்குப் போவதா என்ற போட்டியில் அந்த நிம்மதி சீர்குலைந்திருந்தது. கடவுள்களின் போட்டியால் அந்தக் குடும்பத்தில் எப்போதும் போர்க்கால சூழ்நிலையே இருந்தது.
இதன் நடுவே தங்கள் நெருங்கிய சொந்தக்காரர் திருமணத்திற்கு குடும்பமே திருப்பதிக்கு சென்றது. கீழ் திருப்பதியில் தங்கியிருக்கும் போது திருப்பதியில் மகனின் குழந்தைக்கு மொட்டை போட வேண்டும் என தாத்தாவும் பாட்டியும் ஆசைப்பட்டார்கள். ஆனால் மருமகளிடமிருந்து கடும் எதிர்ப்பு. மகன் அமைதியாக யார் பக்கமும் சேராமல் இருந்தார். தாத்தாவும் பாட்டியும் மற்றவர்களுக்குத் தெரியாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு மேல் திருப்பதிக்கு கிளம்பி விட்டார்கள். இதை கிறிஸ்தவக் குழு கண்டுபிடித்துவிட்டது. சேஸ் செய்து அவர்களும் கிளம்பினார்கள்.
மேல் திருப்பதியில் கோவிந்தன் அருளால் மொட்டை போட வேண்டும் என மாமனார் தயாராக, சாத்தான் கோவிலில் மொட்டையா என்று யேசு அருளால் அதை தடுக்க வேண்டும் என மருமகள் முனைய, பரபரப்பான ஒரு தருணத்தில், மொட்டை போடும் இடத்தில் குழந்தையின் தலை நடுவில் உச்சி முடியை கொஞ்சம் வழித்த நிலையில் பிடித்துவிட்டார்கள். யேசுவுக்கும் கோவிந்தனுக்குமான போட்டியின் முதல் ரவுண்ட் ட்ராவில் முடிந்தது.
ஊர் திரும்பிய மறு நாளே குழந்தைக்கு காய்ச்சல். திருப்பதி சென்று மொட்டை போடாமல் வந்ததால் கடவுள் சோதிப்பதாகவும், அதனால் தான் குழந்தைக்கு உடல்நிலைக் குறைவு என தாத்தா தலைமையில் ஹிந்து கோஷ்டியினர் வாதிட்டார்கள். இவர்களுக்கு சப்போர்ட்டாக ஊரில் உள்ள பல பெருசுகள், “திருப்பதியான்கிட்ட போய் விளையாடலாமா” என்று ஏத்தி விட்டார்கள்.
‘இல்லை இல்லை கிறிஸ்துவ குழந்தைக்கு மொட்டை போட முனைந்ததால் சாத்தான் தாக்கி, குழந்தைக்கு உடல் நலக் குறைவு’ என பெந்தகோஸ்தே குழு பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. இவர்களுக்கு ஆதரவாக ஊரில் இருந்த பிற பெந்தகோஸ்தேக்கள் சேர்ந்து விட்டனர்.
பிறகு கிறிஸ்துவக் குழுவினர் சாத்தானை வீழ்த்த ஒரு திட்டம் தீட்டினார்கள். ‘ஜெபக் கூட்டம் ஒன்று நடத்தி பிரார்த்தித்தால் குழந்தைக்கு உடல் நலம் சரியாகிவிடும்’ என்று ஒரு ஜெபக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். பாதி ஏற்பாடுகள் வரை கள்ள மவுனம் சாதித்த ஹிந்து குழு, நடுவில் களத்தில் இறங்கியது. குழந்தைக்கு மொட்டை போடுவதாக மஞ்சத் துணியில் உச்சி முடியை கட்டி வைத்து வேண்டிக் கொண்டு சண்டை தொடங்கினார்கள்.
ஜெபத் தந்தை ‘ஏசுவின் கருணை இந்த பாவிகளுக்கு கிடைக்கக் கூடாது’ என சாத்தான் சதி செய்வதாகக் கூறி, அதை முறியடித்து யேசுவின் கருணையைப் பெற குழந்தையின் அம்மாவும் குடும்பத்தின் இதர கிறிஸ்தவ உறுப்பினர்களும் 10 ஞாயிறுகள் ஊழியம் செய்யவும், இரண்டு மாத சம்பளத்தை(கணவன் மனைவி இருவருமே அரசு பள்ளியில் ஆசிரியர்கள்) சர்ச்சிற்கு அளிப்பதாக வேண்டிக்கொள்ளவும் பணித்தார். ஆக இந்த கோவிந்தா – அல்லேலுயா சண்டையை வைத்து பாதிரி பல ஆயிரங்களை தேத்திவிட்டார்.
எப்படியாவது கூட்டம் நடத்திவிட்டால் சாத்தான் ஒழிந்து தேவனின் கருணை கிடைத்துவிடும் அல்லவா! ஜெபக் கூட்டம் நடத்தி விட்டு சர்ச்சிற்கு காணிக்கை தருவதையும் நேர்ந்து கொண்டு அதன் பிறகு குழந்தைக்கு மொட்டை போடலாம் என சமரசத்திற்கு வந்தார்கள். (பின்னால் அதை தடுத்துவிடலாம் என்பது ஐடியா).
ஜெபம் உச்சம் அடைந்து அனைவரும் சத்தம் போட்டு அல்லேலுயா போட்டு ‘அன்னிய பாஷை’யில் உளறத் தொடங்கினார்கள். குழந்தை மிரண்டு அழத் தொடங்கியது. அதனால் அம்மா குழந்தையை வீட்டினுள் தொட்டிலில் போட்டு விட்டுச் சென்றார். ஜெபக் கூட்டம் உச்ச பிரார்த்தனையை அடைந்தது, அல்லேலூயா அதிர தொடங்கியது.
ஏசுவின் ஆட்கள் அங்கே செம ஃபார்மில் இருக்கும் போது வீட்டிலிருக்கும் குழந்தை தனியாக இருப்பதைக் கண்டுகொண்ட, கொஞ்சமும் தாமதிக்க விரும்பாத ஹிந்து கோஷ்டியினர் முடி திருத்துபவரை அழைத்து வந்து குழந்தைக்கு மொட்டை போட்டு முடியை மஞ்சள் பையில் சேகரித்து விட்டனர். முடியை அன்றிரவே திருப்பதி சென்று காணிக்கையாக செலுத்தி விட்டு வந்தனர்.
நியாயமாக பார்த்தால் இப்பொழுதும் அல்லேலுயா Vs கோவிந்தா போட்டி டிரா. சரி அதை விடுங்கள், இருக்கும் ஏதோ ஒரு கடவுள், இல்லை இரண்டு கடவுளரின் அருளால் குழந்தை நலமாகி இருக்க வேண்டும் அல்லவா? ப்ச், காய்ச்சல் அதிகமாகி விட்டது.
காய்ச்சல் அதிகமாகியதால், 10 ஞாயிறு ஊழியம் என்ற வேண்டுதல் 1 வருடத்துக்கு அனைத்து ஞாயிறுகள் என்று ஆனது. இரண்டு மாத சம்பளம் காணிக்கை என்பது மூன்று மாதமாகிவிட்டது. சண்டை நீடிக்க நீடிக்க பாதிரியும் தனது ரேட்டை கூட்டிக் கொண்டே வந்தார். கோவிந்தா சைடு ரேட்டும் கண் மண் தெரியாமல் எகிறிக் கொண்டே வந்தது. அதன்படி கோவிந்தாவுக்கு தங்க ஊஞ்சல், சிறப்பு பூஜைகள் என்று காணிக்கைகள் கூடியிருந்தன. இதற்கிடையில் மற்ற ஊர்க்காரர்கள் திட்டி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வைத்தார்கள். ஒருவேளை இந்த வரலாற்றுப் புகழ்மிக்க சண்டையால் அந்தக் குழந்தைக்கு ஒன்றுகிடக்க ஒன்று ஆகியிருந்தால்? அப்போதும் அவர்கள் இறுதிச்சடங்கு யார் வழக்கப்படி என்று சண்டைதான் போடுவார்கள்.
நல்லவேளை இப்பொழுது குழந்தைக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றதால் தான் குணமாகியது என்று என நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மை என்ன?
யேசுவும் கோவிந்தாவும் மூன்றாவது தவணையாக வாங்கிய காணிக்கையில் மனம் குளிர்ந்து, ஊரார் உருவில் வந்து வலியுறுத்தி குழந்தையை மருத்துவமனைக்கு போகச் செய்த அந்த மெய்சிலிர்க்க வைக்கும் செயலால்தான் குழந்தைக்கு உடல்நிலை சரியானது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும்.
பாருங்களேன், இப்பொழுதும் அல்லேலுயா vs கோவிந்தா போட்டி டிராதான். இறுதியில் இந்த ஆட்டத்தின் பயனாக அந்தக் குடும்பம் பெற்றது என்ன? பல ஆயிரம் ரூபாய்களை காணிக்கையாக செலுத்தினார்கள், வீட்டிற்குள் நிம்மதி பறி போனது, குழந்தைக்கு கடும் காய்ச்சல் வந்து அவதிப்பட்டது.
இதற்கு என்னதான் தீர்வு?
இனி ஒரு வீட்டில் இத்தகைய அல்லேலோயா, கோவிந்தா பிரிவுகள் இருந்தால் அந்த வீட்டுக் குழந்தைக்கு பாதி மொட்டையும், கழுத்தில் பாதி சிலுவையை மாட்டி விட்டு சமரசம் செய்து கொள்ளலாமோ? இதை விட நல்ல ஆலோசனை இருந்தால் நீங்களும் சொல்லலாம்.
நன்றி:வினவு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக