தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.5.12

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!


தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அப் பிரச்சினைக்கு இது வரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.இச் சம்பவம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்த போதிலும் துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம்

நீண்டதொரு மௌனம் சாதிப்பதும் பௌத்த பேரினவாதிகளுக்கு சார்பாக நடந்து கொள்ள முயற்சிப்பதும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிருப்தியையே தோற்றுவித்திருக்கிறது.

பள்ளிவாசல் தாக்கப்பட்டவுடன் கொதித்தெழுந்த முஸ்லிம் சமூகம் இப்போது சற்று அடங்கிப் போயிருக்கிறது. அரசியல்வாதிகள் இப்போது அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டனர். தம்புள்ளை சம்பவம் பற்றி இதன்பின்னர் தான் வாய்திறக்கப் போவதில்லை என்று சில வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் பகிரங்கமாகவே கூறிவிட்டார். ஏனைய அரசியல்வாதிகளும் ஜனாதிபதி பார்த்துக் கொள்ளட்டும் என்று வாளாவிருக்கிறார்கள். சிவில் சமூக பிரதிநிதிகளினதும் செயற்பாட்டாளர்களினதும் முன்னெடுப்புகள் வலுவிழந்ததாகவே உள்ளன.

வெசாக் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறும் அதன் பின்னர் நிலையானதொரு தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் வெசக் முடிந்து பொசனும் வந்துவிட்டது. ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
இம் மாத ஆரம்பத்தில் கூடிய அமைச்சரவையில் தம்புள்ளை விவகாரம் குறித்து பிரதானமாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை. முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த விடயம் அவசியமற்ற ஒன்றாக இருந்திருக்கக் கூடும்.
தம்புள்ளை சம்பவத்திற்குப் பின்னர் பாராளுமன்றம் கூடியபோதிலும் எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் அதுபற்றிக் குரல் எழுப்பவில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இரண்டு விடயங்களுக்காகவே வாய் திறப்பார்களாம். ஒன்று சாப்பிடுவதற்கு. அடுத்தது கொட்டாவி விடுவதற்கு என சில வருடங்களுக்கு முன்னர் சிரேஷ்ட உலமா ஒருவர் சொன்ன கருத்தே இந்த இடத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருந்த வெசக் கூட்டை மாடுகள் சேதமாக்கியமைக்காக இராணுவ வீரர் ஒருவர் தமிழ் சிறுவன் ஒருவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவத்தை விஜித ஹேரத் எம்.பி. பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தி குறித்த இராணுவ வீரரை கைது செய்வதற்கான அழுத்தத்தையும் வழங்கியிருந்தார்.
அநீதி இழைக்கப்பட்ட ஒரு தமிழ் சிறுவனுக்காக குரல் எழுப்பி நீதியைப் பெற்றுக் கொடுக்குமளவுக்கு விஜித ஹேரத் எம்.பி.க்கு இருக்கும் தைரியம் கூட முஸ்லிம் அமைச்சர்களுக்கோ எம்.பி.க்களுக்கோ இல்லை என்ற உண்மையை அவர்களை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய நமது சமூகம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
மறுபுறம் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தினால் மேலும் உற்சாகமடைந்திருக்கும் பௌத்த பேரினவாதிகள் தமது கைவரிசையை நாடு முழுவதும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

குருநாகல் ஆரிய சிங்களவத்தையில் பல வருடங்களாக இயங்கிவரும் அஹதியா மற்றும் குர்ஆன் மத்ரசாவில் தொழுகை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. தெஹிவளை மிருகக் காட்சிச் சாலைக்குப் பின்புறமாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரசா ஒன்றின் புனரமைப்புப் பணிகளால் கலவரமடைந்த அப்பிரதேச பௌத்த பிக்குகள் தெஹிவளை-கல்கிசை மேயரிடம் அதுபற்றி முறையிட்டிருக்கிறார்கள்.
புறக்கோட்டை ரயில் நிலையம் அருகாமையில் அமைந்திருக்கும் உலக சந்தைக் கடைத் தொகுதியில் பணிபுரியும் முஸ்லிம்கள் அன்றாட தொழுகைக்காக பயன்படுத்தி வந்த கடை ஒன்றை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அநுராதபுரம் மடாட்டுகம பள்ளிவாசலுக்கு நான்கு பக்கங்களைக் கொண்ட அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அக் கடிதத்தில் கோரப்பட்டிருக்கிறது.
இப்படி தம்புள்ளை சம்பவத்தினால் உற்சாகமடைந்திருக்கும் பேரினவாத சக்திகள் இன்று நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களைப் பரப்பத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தான சமிக்ஞையாகவே தெரிகிறது.

நிலைமை இவ்வாறு மோசமடைந்து சென்று கொண்டிருந்தாலும் முஸ்லிம் சமூகம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் கருத்து மோதல்களுக்குள் சிக்கி காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரை பெரும் சர்சைக்கு வித்திட்டிருக்கிறது. தம்புள்ளை விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் அமைதி காக்க வேண்டும் என்றும் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். குறிப்பாக கண்டி நகர அபிவிருத்திப் பணிகளுக்காக லைன் ஜம்ஆப் பள்ளிவாசலின் ஒரு பகுதி விட்டுக்கொடுக்கப்பட்டதாகவும் வீதி அபிவிருத்திப் பணிகளின் பொருட்டு பம்பலப்பிட்டி நிமல் வீதி பள்ளிவாசலினால் குறிப்பிட்டளவு காணி விட்டுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த உதாரணங்களைக் குறிப்பிட்டதன் மூலம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திலும் முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதன் மூலமே தீர்வினைக் காண முடியும் எனும் கருத்தினை அவர் மறைமுகமாக வலியுறுத்த முற்பட்டிருந்தார்.

ரிஸ்வி முப்தியின் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்திருந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லதீப் பாரூக், முஸ்லிம் சமூகத்தை விற்று காடைத்தனத்துக்கு துணைபோவதாகவே இந்தக் கூற்று அமையும் என காட்டமாகவே குறிப்பிட்டிருந்தார்.
லதீப் பாரூக்கைத் தொடர்ந்து மேலும் பலரும் இந்த விடயம் தொடர்பில் மின்னஞ்சல் வழியாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் கருத்துக்களைப் பரிமாறி வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தம்புள்ளை விவகாரத்தில் எந்தவொரு தரப்பும் அரசியல் இலாபமீட்டும் வகையிலோ அல்லது பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாட்டைத் தூண்டும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்றே தாம் அழைப்புவிடுப்பதாகவும் ரிஸ்வி முப்தியின் கூற்று தொடர்பில் சிலர் ஊடகங்கள் வாயிலாக தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் தெரிவித்திருந்தது.

எது எப்படியிருப்பினும் தம்புள்ளை விவகாரத்தில் முஸ்லிம் சமூகத்தை ஓரணியின் கீழ் தலைமையேற்று நடத்துவதற்கான பொறுப்பு உலமா சபையிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. சம்பவம் இடம்பெற்ற மறுதினம் உலமா சபை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல்வாதிகள், முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பூரண சம்மதத்துடன் உலமா சபையே இதனை தலைமையேற்று வழிநடத்த வேண்டும் எனும் தீர்மானம் எட்டப்பட்டது.
குறிப்பாக அரசியல்வாதிகளும் முஸ்லிம் அமைப்புகளும் பிரிந்து நின்று செயற்படக் கூடாது எனவும் உலமா சபைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் இதன்போது முக்கியமாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கப்பால் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்புதல், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருதல் இல்லையேல் நீதிமன்றத்தை நாடுதல், பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவோ அல்லது வேறு இடத்தில் நிர்மாணிக்கவோ அனுமதிக்கக் கூடாது எனும் நான்கு முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.

துரதிஷ்டவசமாக ஒரு மாத காலம் கடந்துவிட்ட போதிலும் மேற்குறித்த தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
ஜனாதிபதிக்கு இதுவரை கடிதம் அனுப்பப்படவில்லை என்பதும் 10 க்கும் குறைவான முஸ்லிம் எம்.பி.க்களே அதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதும் பலரும் அறியாத உண்மை.
இத் தாக்குதல் சம்பவத்தை தலைமையேற்று நடத்திய இனாமலுவே சுமங்கல தேரருக்கோ அல்லது அவரது குழுவினருக்கோ எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாறாக அவர் பகிரங்கமாக தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களையே பரப்பி வருகிறார். முஸ்லிம்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் எனும் அபாண்டத்தை சுமத்துகிறார். அதுவும் போதாதென்று வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கிறார். இதன் பின்னணியிலேயே களுத்துறையில் கூட ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவோ அல்லது வேறு இடத்தில் நிர்மாணிக்கவோ முஸ்லிம் சமூகம் அனுமதிக்கக் கூடாது எனும் தீர்மானமும் இப்போது ஊசலாடிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சந்தித்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்திய செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த அச் சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது பற்றி இதுவரை உலமா சபை வாய்திறக்கவில்லை. இதன்போது பேசப்பட்ட விடயங்களை ஊடகங்ளில் வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி தம்மிடம் கேட்டுக் கொண்டதாக உலமா சபை பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தொடர்ந்தும் உலமா சபை இது பற்றி மௌனம் சாதிப்பது மென்மேலும் விமர்சனங்களுக்கே வழிவகுக்கக் கூடும்.

ஜனாதிபதியை உலமா சபை சந்தித்ததைத் தொடர்ந்து தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் மந்தகதியை அடைந்தன என்பதே உண்மையாகும். இந்த விடயத்தில் நியாயமான தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவேன் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அதனை நம்பியே முஸ்லிம் தரப்பு அமைதி காத்தது. ஆனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நிலையான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதா எனும் சந்தேகமே தற்போது வலுப்பெற்றுள்ளது.
இனாமலுவே சுமங்கல தேரருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரகளுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய விரைவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பள்ளிவாசலை இடம்மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
சட்டவிரோத கட்டிடங்கள் என்ற பெயரில் கொழும்பிலிருந்து நூற்றுக் கணக்கான குடும்பங்களை வெளியேற்றிய, தொடர்ந்தும் வெளியேற்ற திட்டமிட்டிருக்கின்ற இந்த அதிகார சபைக்கு இது ஒன்றும் பெரிய சவாலான விடயமாக இருக்கப் போவதில்லை.

இந்த இடத்தில்தான் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு கையாளப் போகிறது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆரம்பத்தில் இந்த விடயத்தை அரசியல் கலக்காது கையாள வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் தீர்மானித்தாலும் தற்போது இந்த விடயம் அரசியலாக்கப்பட்டுவிட்டது. பள்ளிவாசல் விடயத்தில் கடுமையாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று ஜனாதிபதிக்குப் பயந்து மௌனம் காக்கிறார்கள். நாம் இது பற்றிப் பேசமாட்டோம் என்று பகிரங்கமாகவே சொல்கிறார்கள். அதாவது இதனை உலமா சபை பார்த்துக் கொள்ளட்டும் என்று கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக நடந்து கொள்கிறார்கள்.

முஸ்லிம் சிவில் சமூகமும் உலமா சபையை விமர்சிக்கிறதே தவிர அரசியல்வாதிகள் பற்றி பேசுவதாகத் தெரியவில்லை.
உலமா சபை இந்த விடயத்தை தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டியது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தார்மிகக் கடமையாகும்.
தம்புள்ளை பள்ளி விவகாரம் மார்க்கப் பிரச்சினை அல்ல. மார்க்கப் பிரச்சினை என்றால் அதற்கான தீர்வை உலமா சபையிடம் வேண்டி நிற்கலாம். மாறாக இது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சினை. சமூகத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்காகவே நாம் தேர்தல்களில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறோம். நமது உரிமைகளை உறுதி செய்கின்ற இடமே பராளுமன்றம். மாறாக கோட்டை விடுகின்ற இடமல்ல.

ஆக இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க சமூகத்தின் உரிமையை உறுதி செய்ய வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையேயாகும்.
எனவேதான் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திற்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்குமான அழுத்தத்தை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டியது முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடப்பாடேயாகும்.
ஆனால் அதற்கான அழுத்தத்தை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்குவது யார்? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் வழங்குவதற்கான பலத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொண்டிருப்பதாக தெரியவில்லை. எனவேதான் உலமா சபை பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதான வலுவான ‘சிவில் சமூக அமுக்கக் குழு’ (PRESSURE GROUP) ஒன்று உடனடியாக தாபிக்கப்பட வேண்டும். அதில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மாற்று அரசியல் சக்திகள் என பலம்வாய்ந்ததொரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இக் கட்டமைப்பே எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய வேண்டும். அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். இல்லையேல் சமூகப் பிரச்சினைகளை உலமா சபையின் தலைகளில் சுமத்திவிட்டு அரசியல்வாதிகள் தப்பித்துவிடுவதற்கான வழிகளை நாமே திறந்து கொடுத்ததாக அமைந்துவிடும்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட தலைமைகள் வெகு சீரியஸாக சிந்திக்க வேண்டும். சரியான தருணத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளே சமூகத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும். இது சரியான தருணம். சரியான முடிவை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி: விடிவெள்ளி

0 கருத்துகள்: