புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும், அதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனையும் உறுதிச்செய்யும் முழுமையான சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் அப்பாவிகள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட சூழலில் இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சட்டம், உள்துறை, சிறுபான்மை விவகாரம் ஆகிய அமைச்சகங்கள் ஒன்றிணைந்து இச்சட்டத்திற்கு உருக்கொடுப்பார்கள்.
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக இச்சட்டம் குறித்த அறிக்கை வெளியாகும் என கருதப்படுகிறது.
போலீஸாரை தவிர சி.பி.ஐ, என்.ஐ.ஏ ஆகிய புலனாய்வு ஏஜன்சிகளையும் இச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்படும். கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் இதில் உட்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்று அமைச்சகங்கள் இணைந்து இவ்விவகாரம் தொடர்பான சட்ட முன்வரைவை தயார் செய்வார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து அமைச்சரவை இச்சட்டம் குறித்து விவாதிக்கும்.
வழக்குகளில் தவறாக சேர்க்கப்பட்டவர்களின் எதிர்கால வாழ்க்கை இருள் அடைந்துவிடாமல் இருக்கவும், வேலைவாய்ப்பை உறுதிச்செய்யவும் நன்னடத்தை சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற பரிந்துரையும் பரிசீலனையில் உள்ளது.
ஒருங்கிணைந்த அமைச்சக குழு இதுக்குறித்து விவாதிக்கும். கூடுதல் முன் எச்சரிக்கையுடன் புலனாய்வு விசாரணையை மேற்கொள்ளவும், தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் நிரபராதிகளை குற்றவாளிகளாக சேர்ப்பதை தவிர்க்கவும் இச்சட்டம் உதவும் என கருதப்படுகிறது.
நியூஸ்@தூது
நியூஸ்@தூது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக