தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.12.11

ராணுவ உடையில் சென்று, போர் ஒத்திகையையும் பார்வையிட்டார் பிரதீபா பட்டீல்


ஜனாதிபதி பிரதீபா பட்டீல் டாங்கிப்படை ராணுவ வீரர்கள் அணியும் கவச உடை அணிந்து, ராணுவ டாங்கியில் சென்று போர் ஒத்திகையை பார்வையிட்டார்.ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே நகரத்தில் உள்ள விமானப்படை தளத்தில், போர் விமானிகள் அணியும் பாதுகாப்பு உடை அணிந்து, சுகோய்-30 எம்.கே.ஐ. என்ற முன்னணி போர் விமானத்தில் பறந்தார். இது ஒரு சாதனையாக அறிவிக்கப்பட்டது.நேற்று அவர் 2-வது சாதனை ஒன்றை படைத்தார். ராணுவ டாங்கியில் வீரர்கள் அணியும் கறுப்பு நிறத்திலான முழு கவச அங்கியை அணிந்து கொண்டு,
டி-90 என்ற போர் டாங்கியில் பயணம் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் பல தரப்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்ற 'சுதர்சன் சக்தி' என்ற போர் ஒத்திகை நடந்தது. இதை பார்வையிடத்தான் 76 வயதான அவர், ராணுவ டாங்கியில், கவச உடை அணிந்து சென்றார். இந்திய ஜனாதிபதி ஒருவர் ராணுவ டாங்கியில், கவச உடை அணிந்து பயணித்தது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கும் அதே டாங்கியில் சென்றார்.
ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, தென்பகுதி ராணுவ தளபதி ஏ.கே.சிங் ஆகியோர் மற்றொரு ராணுவ டாங்கியில் இந்த போர் ஒத்திகையை பார்வையிடச் சென்றனர். 50 ஆயிரம் ராணுவ வீரர்கள், 300 டாங்கிகள், 250 பீரங்கிகள் மற்றும் சு-30எம்.கே.ஐ, ஜாகுவார், மிக்-27, மிக்-21 ஆகிய போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டன.
அவர்களின் சாகசத்தை ஜனாதிபதியும், முப்படைகளின் தலைமை தளபதியுமான பிரதீபா பட்டீல், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோர் ராணுவ தளபதிகளுடன் பார்வையிட்டு பாராட்டினார்கள்.
இந்திய ராணுவத்தில் தகவல் தொடர்பு மற்றும் போர் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கே மேற்கொள்ளும் நவீன ராடார் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த ராடார் தரைப்படை மற்றும் விமானப்படைகளின் அனைத்து போர் நடவடிக்கைகளையும் ஒருங்கே கண்காணித்து, தகவல் அனுப்பும் திறன் கொண்டது. இதன் செயல்பாடுகளும் நேற்றைய போர் பயிற்சியில் காட்டப்பட்டன. அவற்றையும் ஜனாதிபதி மற்றும் ராணுவ மந்திரி பார்வையிட்டனர்.

0 கருத்துகள்: