தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.11.11

ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

ஜெருசலேம், நவ. 3-  அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஈரான் நாட்டு அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் இகுட் பராக் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாகவும், பிற
அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் பெஞ்சமின் நேதன்யா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முதலில் இந்த தாக்குதல் திட்டத்தை எதிர்த்து வந்த வெளியுறவு அமைச்சர் அவிட்கர் லிபர்மேன் இப்போது அதை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து வரும் 8ம் தேதி சர்வதேச அணு ஆராய்ச்சி அமைப்பு (International Atomic Energy Agency) தாக்கல் செய்ய உள்ளது. அப்போது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது தெளிவாகும்.
அதன் அடிப்படையில் ஈரானைத் தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
இப்போதுள்ள நிலையில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுகள் கருதுகின்றன. இதனால் ஆயுதத் தயாரிப்பை இப்போதே தடுத்து நிறுத்த, அதன் அணு ஆராய்ச்சி மையங்களைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் கருதுகிறது.
ஆனால், தனது பெரும்பாலான அணு ஆயுத ஆராய்ச்சி மையங்களை ஈரான், நிலத்துக்கடியில் வைத்துள்ளது. மலைகளைக் குடைந்து, மிக ஆழத்தில் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையைக் குடைந்து, பூமிக்கு அடியில் மிகப் பாதுகாப்பான இடத்தில் அந் நாட்டின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.
மின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது.
மருத்துவ ஆராய்ச்சிக்காக யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறினாலும் அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரான் மீது நாம் தாக்குதல் நடத்துவதை விட அமெரிக்கா தாக்குதல் நடத்துவதே சிறந்தது என பாதுகாப்பு வழிமுறைகளுக்கான இஸ்ரேலிய அமைச்சர் மோஷே யா லோன் கூறியுள்ளார். அதே போல உள்துறை அமைச்சரான எலி இஸ்ஹாய், இந்த தாக்குதல் திட்டம் தொடர்பான தனது முடிவை எடுக்கவில்லை என்று தெரிகிறது. ஈரானிடம் சுமார் 1 லட்சம் ஏவுகணைகளும் ராக்கெட்களும் உள்ள நிலையில், இஸ்ரேலால் அவ்வளவு எளிதாக ஈரானை தாக்கிவிட முடியாது என்கிறார்கள்.

0 கருத்துகள்: