தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.11.11

கருணாநிதி திறந்துவைத்த அண்ணா நூலகம், குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாகிறது.


சென்னை கோட்டூர்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டு
இயங்கி வந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகக் கட்டடம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படவுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்
2011-2012 ஆம்
ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான முடிவுகள் 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளிக்குழந்தைகளுக் கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், இங்குபேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் ஆகியவை இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமையப் பெறும்.

ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமையவிருக்கும் டி.பி.ஐ. வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்திற்கு மிக அருகில் உள்ளதால் நவீன மைய நூலகத்தினை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அண்ணா நூற்றாண்டு நூலகம் டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பின், தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக்கட்டிடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்றி அமைக்கப்படும்.
குழந்தைகளுக்கான இது போன்ற அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இதுவரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் நலனுக்கென இது போன்ற உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப்பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
முதலமைச்சரின் இந்த முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழறிஞர்கள், தன்மானமுள்ள தமிழர்கள் முடிவுக்கே இதனை விடுவதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: