சென்னை நகரில் தியாகராய நகர், பாரிமுனை, மைலாப்பூர் போன்ற இடங்களில் விதிகளை மீறி வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், கட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்திர விடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமூக சேவகர் டிராபிக் ராமசாமி கடந்த 2006-ல் இந்த வழக்கை தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுவை நியமித்தது. இந்த குழுவில் சி.எம்.டி.ஏ. என்ஜினீயர்கள், மாநகராட்சி அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கட்டிடங்களை ஆய்வு செய்தனர். அப்போது ஏராளமான கட்டிடங்கள் தியாகராய நகர் பகுதியிலும், நகரின் மற்ற இடங்களிலும் விதியை மீறி கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
2007-ம் ஆண்டு அவற்றுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பி இடிக்கவும் உத்தர விட்டது. இந்த நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டிடங்கள் இடிக்கப்படுவதை நிறுத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. கட்டிடங்களை இடிக்கும் போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவே இதை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்.
என்று கூறி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலும் சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனால் கட்டிடங்கள் இடிக்கும் நடவடிக்கை முடங்கியது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு 10 மாதத்துக்கு முன் தீர்ப்பு கூறி அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க கடந்த ஜுலை மாதம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. அதன்படி தியாகராய நகரில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினார்கள். என்றாலும் இதில் கடந்த மாதம் வரை மேல் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இடையில் உள்ளாட்சி தேர்தல் வந்ததாலும், நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
இது பற்றி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் மீது ஏன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோர்ட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சி.எம்.டி.ஏ.யும், மாநகராட்சியும் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
இதையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து தியாகராய நகர் சென்றனர். அங்கு ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, வடக்கு உஸ்மான் ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு ஆகிய பகுதியில் விதியை மீறி கட்டப்பட்ட நிறுவனங்களுக்கு அதிரடியாக `சீல்' வைத்தனர்.
சில நிறுவனங்களில் கடை ஊழியர்கள் தங்கி இருந்தனர். அவர்களை வெளியேற்றி விட்டு ஷட்டரை இழுத்து மூடி சீல் வைத்தனர். சில கடைகளில் சரக்குகளை இறக்கிக் கொண்டு இருந்தனர். அங்கும் பணியை நிறுத்தச் சொல்லி சீல் வைத்தனர். அதிகாரிகள் சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து கடை ஊழியர்கள் வெளியேற மறுத்தனர். உடனே அதிகாரிகள் எங்கள் கடமையை செய்ய விடுங்கள், இல்லையெனில் போலீசை அழைப்போம் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து ஊழியர்கள் தாங்களாகவே வெளியேறி விட்டனர். பெரிய அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகளும், சிறிய கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் சீல் வைத்தனர். கடையின் பூட்டுக்கு மேல் அரக்கு பூசி அதன் மேல் சீல் வைத்தார்கள். கடையின் ஷட்டர் கதவு முழுவதையும் டேப்பால் இணைத்து கட்டிப் போட்டனர்.
விதியை மீறி கட்டப்பட்டதால் இந்த கட்டிடம் சி.எம்.டி.ஏ.வால் சீல் வைக்கப்படுகிறது' என்று ஆங்கிலத்தில் வாசகம் எழுதி கதவில் ஒட்டினார்கள். தினமும் பல லட்சம் பொருட்கள் விற்பனையாகும் மக்கள் நடமாட்டம் நிறைந்த இந்தப்பகுதி அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பாக காணப்பட்டது.
நிறுவனம் மற்றும் கடை நிர்வாகிகளும், வேலைக்கு வந்த ஊழியர்களும் அங்கு தவிப்புடன் நின்றிருந்தனர். ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைகளில் உள்ள 61-க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டது. இதில் ஒரே கட்டிடத்தில் செயல்பட்ட 40 கடைகளும் அடங்கும். இதனால் நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், டிபன் கடைகள், ஜுஸ் கடைகள் என விதியை மீறி கட்டப்பட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.
சீல் வைக்கப்பட்ட கடைகள் வருமாறு:-
சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் (ஒரு கடை மட்டும்), பாலு ஜுவல்லர்ஸ், ஸ்ரீதேவி கோல்டு கவரிங், ரத்னா ஸ்டோர்ஸ் (பர்ம்), விமலா டிரஸ்ஸஸ், வி.கே.கே. டிரேட் சென்டரில் உள்ள 40 கடைகள், ஸ்டூடியோ கேசுவல் ஜவுளிக்கடை, டெக்ஸ்டைல் இந்தியா, அமுதம் டெக்ஸ். வைரம் பியூட்டி பார்லர், பாபு ஷூ சென்டர், ஷோபா டெக்ஸ்டைல்ஸ், எஸ்.ஏ. ஐ.டி. காம்ப்ளக்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் சுவீட் கடை, சண்முகா ஸ்டோர்ஸ், அன்பழகன் பழக்கடை, நியூநெல்சன் வாட்ச் மார்ட், சிவா விஷ்ணு போட்டோ ஸ்டூடியோ, பிரஸ் அண்ட் பிரஸ், லாட்ஸ் ஷூ, ராசி மேச்சிங், மாடர்ன் ஸ்டோர்ஸ், ரதி கோல்டு கவரிங், ரவி டெக்ஸ் டைல்ஸ், கனி மேட்சிங்,
பேஷன், ஷபுரா ஸ்டோர்ஸ், எய்டின்ஸ், ஓம் கவரிங் நகைக் கடை. சரவணா அணிகலன், அலங்கார் ஜுவல்லரி, கந்தவரடி ஆர்ட் ஜுவல்லரி, கோகோ கோலா மூன் ஸ்நாக்ஸ், ஸ்ரீவிநாயகா ஜுவல்லரி, சாம்சனைட், அமெரிக்கர் டூரிஸ்டர், டைம்ஸ் பேக்டரி, நேஷனல் விரைவு உணவகம், ஸ்ரீராம் மருந்தகம், எஸ்மிஸ், லெதர் பேலஸ், மேத்தா தங்க மாளிகை, மேத்தா கோல்டு பேலஸ், மணி ஆட்டோ மொபைல்ஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக