"லிபியாவில் புரட்சி நடத்தி வரும் புரட்சிப்படையிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். தாய் நாடான லிபியாவை மீட்கும் வரை எங்களது கொரில்லா போராட்டம் நீடிக்கும்" என்று லிபியா அதிபர் கடாபி டெலிவிஷனில் அதிரடி பேட்டி அளித்து உள்ளார்.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த முகம்மது கடாபி ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. அங்கு கடந்த 6 மாதகாலமாக கடாபி ராணுவத்துக்கும்
, புரட்சிப்படையினருக்கும் இடையே கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. லிபியாவின் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட முக்கிய நகரங்களை புரட்சிப்படை பிடித்து உள்ளது.லிபியாவில் புரட்சி வெடித்ததும் அதிபர் கடாபி அவரது மனைவி ஷபியா, மகள் ஆயிஷா, மகன்கள் அல்ஜீரியா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். கடாபியை பிடிக்க புரட்சிப்படையும் நேட்டோ படைகளும் தீவிரமாக தேடிவருகின்றன. கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 நாட்களுக்குள் சரண் அடைய வேண்டும் என புரட்சிப்படை அறிவித்து இருந்தது. இந்த கெடுவை தற்போது 7 நாட்களாக புரட்சிப்படை நீட்டித்து உள்ளது.
இந்த நிலையில் புரட்சிப்படையிடம் கடாபி மற்றும் அவரது மகன் ஷாதி சரண் அடைய திட்டமிட்டு இருப்பதாக புரட்சி படையினர் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு லிபியா அதிபர் கடாபி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி அமைத்த நாள் மற்றும் புரட்சிப்படையினரின் சரண்டர் பற்றிய செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கடாபி சிரியாவை மையமாக கொண்டு ஒளிபரப்பும் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று தோன்றினார். அவர் டெலிவிஷனில் ஆவேசமாக பேசினார். அவரது அறிவிப்பின் ஆடியோ கேசட் வெளியாகி உள்ளது.
அதில் அதிபர் கடாபி கூறியிருப்பதாவது:-
லிபியாவில் புரட்சி நடத்தி வருபவர்களிடம் நாங்கள் சரண் அடைவதாக வெளியான செய்தியை மறுக்கிறோம். நாங்கள் ஒருபோதும் சரண் அடையமாட்டோம். தாய் நாட்டை காக்க போராடுவதில் உறுதியாக இருக்கிறோம். அதுவரை எங்களுக்கு ஓய்வோ, தூக்கமோ இல்லை. எங்களது கொரில்லா தாக்குதல் நீண்டநாள் நீடிக்கும். புரட்சிக்காரர்களிடம் லிபியாவை மக்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். எனது செல்வத்தை அவர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள். இது எனது மக்களுக்கு சொந்தமானது. புரட்சிப்படையிடம் சிக்கிய திரிபோலியை இஞ்ச் இஞ்சாக மீட்போம். அதே போன்று மற்ற நகரங்களையும் மீட்போம். இவ்வாறு அதில் கடாபி தெரிவித்து உள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக