மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் பாகிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அஜ்மல் அமீர் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் அந்த நாட்டின் கராச்சி நகரத்தில் இருந்து கடல் வழியாக வந்து மும்பைக்குள் ஊடுருவி தொடர்
குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர். சி.எஸ்.டி. ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், லியோபோல்டு ஓட்டல், காமா ஆஸ்பத்திரி, நாரிமன் இல்லம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடத்திய குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 166 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். ராணுவ வீரர்களும், போலீசாரும் நடத்திய எதிர் தாக்குதலில் அஜ்மல் கசாப் தவிர அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நடந்த இந்த தாக்குதலின் போது பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாபுக்கு, கடந்த ஆண்டு மே மாதம் 6-ந் தேதி தீவிரவாத எதிர்ப்பு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவன் செய்த அப்பீல் மும்பை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு, மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த பாகிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு, சதி செய்ததாக மராட்டிய அரசு கைது செய்து வழக்கு தொடர்ந்தது. இதில், இருவரும் சதி செய்ததற்கான போதிய சாட்சியம், ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விசாரணை கோர்ட்டும், மும்பை ஐகோர்ட்டும் விடுதலை செய்தன.
இந்த விடுதலையை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், பாகிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
"இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பாகிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறோம். ஆனால், உங்கள் (மராட்டிய அரசு) வழக்கு ஒரு பலவீனமான வழக்கு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என்று நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப், அந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளான். அவனது மனுவையும் தங்களது அப்பீல் மனுக்களுடன் சேர்த்துக் கொள்ளும்படியும் மராட்டிய அரசு கேட்டுக் கொண்டிருந்தது.
அதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், "கசாபின் மனு விஷயத்தில் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளோம்" என்று மட்டும் தெரிவித்தனர். கசாபின் தண்டனை குறித்து எந்த உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பிக்கவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக