தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.11

பத்மநாபசாமி கோவில் 6-வது அறையை திறக்கக்கூடாது என்று மன்னர் குடும்பத்தினர் கூறுவது ஏன்?: சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


திருவனந்தபரம் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷம் வழக்கில், மன்னர் குடும்பத்தினர் 6-வது அறையை திறக்கக்கூடாது என்று கூறுவது ஏன்? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில் தங்க நகைகள் அடங்கிய பொக்கிஷம் இருப்பதாகவும், அதை திறந்து பார்த்து கணக்கிடும் படியும், கோவிலை மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்து எடுத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.பி.சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. திருவனந்தபுரம் கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து பார்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் 7 பேர் கொண்ட கமிட்டியினர் முன்னிலையில் ஏற்கனவே திறக்கப்பட்டது.
அப்போது அந்த அறைகளில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள், வைரம், வைடூரியம், நவரத்தினங்கள் பதித்த பழங்கால நகைகள், ஏராளமான தங்க காசுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் 6-வது அறையை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த அறையின் கதவில் பாம்பின் வரைபடம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த அறையை திறக்க கூடாது என்றும், திறந்தால் விபரீத சம்பவங்கள் நடைபெறும் என்றும் மன்னர் குடும்பத்தினர் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, 6-வது அறையை திறக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த பிரசித்தி பெற்ற நம்பூதிரிகள் இதில் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடந்த தேவபிரசன்னத்தின் முடிவில், 6-வது அறையை திறக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது இதுவரை நடந்த இடைக்கால விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் மன்னர் மார்த்தாண்ட வர்மா சார்பில் வக்கீல் வேணு கோபால் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோவில் பிரச்சினை, மத சம்பந்தமான பிரச்சினை. இதில் கோர்ட்டு கவனமாக செயல்பட வேண்டும். மத உணர்வுகளை புண்படுத்தும் எந்த முடிவையும் கோர்ட்டு அறிவிக்க கூடாது. 6-வது அறையை திறந்தால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று தெய்வ பிரசன்னத்தில் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே "பி" என்ற 6-வது அறையை திறந்து பார்க்க தடை விதிக்க வேண்டும். இதுவரை ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட கோவில் நகைகள் மற்றும் சாமிக்கு அணிவிக்கும் தங்க-வெள்ளி ஆபரணங்களை படம் எடுக்கவோ, மதிப்பீடு செய்யவோ கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த கருத்தை எதிர்த்து, வாதியின் வக்கீல் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்டபின் நீதிபதிகள் கூறியதாவது:-
திருவனந்தபுரம் கோவில் நகைகளை மதிப்பீடு செய்யலாம் என்று முதலில் மன்னர் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டார்கள். இப்போது கூடாது என்கிறார்கள். இந்த வழக்கில் மன்னர் குடும்பத்தினர் அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றுவது ஏன்? இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
6-வது அறையை திறப்பதா? வேண்டாமா? என்பதை தலைமை குருவிடம் எப்படி ஒப்படைத்தீர்கள்? இந்த வழக்கு கோர்ட்டில் நடக்கிறதா? அல்லது தேவபிரசன்னம் முன் நடக்கிறதா? என்பதை மன்னர் குடும்பத்தினர் உறுதிபடுத்த வேண்டும்.
இதுவரை 5 அறைகளிலும் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்ய வேண்டும். இதற்கு கூடுதல் நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.
ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்வது அவசியம். இதற்கு மன்னர் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான், மன்னர் குடும்பத்தினர் டிபன் பாக்சில் நகைகளை எடுத்துச்செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வராமல் இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

0 கருத்துகள்: