ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்ய விரும்பும் அமெரிக்கா, அல்-கொய்தா இயக்கத்தை முழுதும் அழிக்க நினைக்கிறது. புதிதாக அல்-கொய்தாவின் தலைவராகப் பதவி ஏற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியை கொல்வோம் என்றும் சபதம் செய்துள்ளது அமெரிக்கா.
கடந்த மே மாதம் 1 ஆம் தேதி, அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா-பின்-லேடன் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக்கொன்றது அமெரிக்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடி வந்த ஒசாமாவை, அமெரிக்கா எவ்வாறு திடீரென்று சுட்டுக்கொன்றது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களே ஒசாமாவின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுத்தனர் என்றும் செய்திகள் உலா வந்தன. அவ்வாறு ஒசாமா இருக்கும் இடத்தை தலிபான்கள் அமெரிக்காவுக்குத் தெரிவித்தால், போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்து இருந்தது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆப்கன் அதிபர் ஹமிது கர்சாய், தன்னுடைய அரசும், அமெரிக்காவும் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறி இருந்தார். தற்பொழுது, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னரே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்த காலத்தில், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட தலிபான்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்து தலிபான்களை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டது அமெரிக்கா தான். ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யா வெளியேறிய பின்னர் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து, அது சண்டையில் போய் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக