2G ஊழல் வழக்கில் கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கூட்டுச் சதி செய்ததாக சி பி ஐ யால் குற்றம் சாட்டப் பட்டு திகார் சிறையில் அடைக்க பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
முன்னர், சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கேட்டு மனுச் செய்த கனிமொழிக்கு சி பி ஐ யின் எதிர்ப்பு காரணமாக ஜாமீன் மறுக்கப் பட்டது. இரு நீதிமன்றங்களிலும் ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கனிமொழியும், கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் மனுச் செய்து இருந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணையில் சி பி ஐ -யிடம் சில விளக்கங்களைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். "இந்த வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் மீறி வழங்கினால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்" என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது சி பி ஐ.இன்று மீண்டும் கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிங்வி தலைமையிலான பெஞ்ச், கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
கனிமொழியும் சரத்குமாரும் விரும்பினால் பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கோரி மனு செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
இதன்மூலம், 2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணை முடியும்வரை கனிமொழி திகார் சிறையினைவிட்டு வெளியேற இயலாது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக