தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.11

இந்தியா : உணவு, பிரார்த்தனை, அன்பு பெஸ்ட் இந்தியன்


இதுவரை இந்தியாவின் வட மாநிலங்களின் அழகும் சில அவலங்களும் மட்டுமே மேற்குல ஊடகங்களில் கண்களுக்கு தெரிந்ததுண்டு. சற்று மாறுபட்டு தென்னிந்தியாவின் அவலங்களையும், அதிலிருந்து போராடும் அன்பையும் பற்றி அழகாக சொல்லிச்சென்றது, கடந்த 2ம் திகதி அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட India : Eat, Pray, Give - டாக்குமென்டரி.


பல மில்லியன் கணக்கானோரின் விருப்ப வாக்குகள் மூலம், சின்.என்.என். இன் TOP 10 HEROS - 2010 இல் தெரிவான ஒரே ஒரு இந்தியர் இவர். விருது வாங்கிய மேடையில் கூட 'மறுபடியும் தெருவில் தான்  இறங்க போகிறேன், அனாதரவானவர்களுக்கு உதவ போகிறேன் என்று சொன்னவர்.
வெறும் புகழுக்கும்,பணத்திற்குமல்ல. நிஜமாகவே விருதுக்கு பின்னரும் அப்படித்தான் நடந்துகொள்கிறார் என்பதையும் குறித்த டாக்குமெண்டரி சொல்லாமல் சொல்கிறது.
நாராயணன் கிருஷ்ணன் பற்றி இதுவரை அறியாதவர்களுக்கு...
யார் இந்த நாராயணன் கிருஷ்ணன்?
நாராயணன் கிருஷ்ணன் பற்றி கடந்த அக்டோபர் மாதம், புற்றுநோய் ஸ்டெம்செல் ஆய்வு மாணவரான பத்மஹரி தனது 'மேலிருப்பான்' வலைப்பதிவில் எழுதிய விவரண கட்டுரை இது. எமது வாசகர்களுக்கும் சென்றடையட்டும் என்ற நோக்கில் அவருக்கான நன்றியுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறோம் - 4தமிழ்மீடியா குழுமம்

என்னை மாதிரி, உங்கள மாதிரி பள்ளிப்படிப்பை முடிச்சுக்கிட்டு, சமையற்கலையில் தங்கப்பதக்கத்துடன் பட்டப்படிப்பை முடிச்சி, பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணியிலமர்ந்தவர்தான் நம்ம ஹீரோ கிருஷ்ணன்!

பணியில் சிறந்து, அதற்க்கான அங்கீகாரமாய் பல விருதுகளை வாங்கிய கிருஷ்ணனுக்கு, சுவிட்சர்லாந்தில் பணிபுரிவதற்க்கான ஒரு அரிய வாய்ப்பை ஓட்டல் நிறுவனம் வழங்குகிறது! அந்த வேலைக்குச் செல்ல, வீடு சென்று பெற்றோரிடம் விடைபெற்றுச்செல்ல மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.

அவர் சுவிட்சர்லாந்து செல்வதற்க்கு முன், கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிலில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்க்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞ கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!

ஏன்னா, அப்போ அவரு மனக்கண் முன்னாடி, 500 ரூபாயில் வாங்கிய ஃப்ரைடு ரைசில், பாதியை சாப்பிட்டு, நாகரீக அடிப்படையில் மீதியை அப்படியே விட்டுச்செல்லும், ஐந்து நட்சத்திர ஓட்டலின் மேல்தட்டு வாடிக்கையாளர்களே வந்துசெல்கிறார்கள்! உணவோட மதிப்பு தெரியாம, இல்லாதவர்களின் கனவான உணவை உதாசீனப்படுத்திச்செல்லும், இதுமாதிரியானவங்களுக்கு சமைச்சுப்போட்டு, உள்ளிருக்கும் மனிதத்தைக்கொன்றுவிட்டு, பை நிறைய காசு பார்க்கும், ஒரு சராசரி சமையற்காரனாய் (அதுவும் வெளிநாட்டில்) குப்பைக்கொட்டுவதைவிட, தனக்கான உணவை தானே கேட்டுக்கூட பிச்சையாய் பெறமுடியாத, புத்திசுவாதீனமில்லாத பலரின் தினப்பசியை போக்குவதை மன நிறைவோடு செய்யலாம்னு முடிவு பண்ணிக்கிறாரு! அப்போ அவருக்கு வயசு 21……

அன்றிலிருந்து இன்றுவரை, 29 வயதாகும் கிருஷ்ணன் மதுரையைச் சேர்ந்த புத்திசுவாதீனமில்லாதவர்களுக்கு, தேடிச்சென்று கொடுத்த காலை, மதிய மற்றும் இரவு உணவின் எண்ணிக்கை 12 லட்சம்! இவர் தொண்டு தினசரி 400 பேருக்கு உணவு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை! அவர்களில் சிலருக்கு முடிதிருத்துவது, நகம்வெட்டுவது தொடங்கி, அவர்கள் இறந்துவிட்டால் கொள்ளி போடுவது வரை நீள்கிறது வேலையைத்துறந்து, பல நல்லுள்ளங்களின் ஆதரவில் பெறும் பணத்தில் உணவளிக்கும் கிருஷ்ணன் அவர்களின் நிகரில்லாத் தொண்டு!

இந்த எட்டுவருட வாழ்க்கைப்பாதையில், தன்னை பெற்றுவளர்த்த தாய் தந்தையரை தன் லட்சியப்பணிக்கு ஆதரவாய் மாற்றியது முதல், “பாவம் கிருஷ்ணனை முனியடித்துவிட்டது” என்று, கண்டவனையும் தலைவனாக எண்ணி வாழும் தங்கள் பரிதாபமான நிலையை உணராமல் முனுமுனுத்த பல தமிழர்களை கடந்து வந்தது வரை, வெற்றிகரமாக இன்னும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா எண்ணும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! ஆனால், அவரின் நோக்கம் இந்த அங்கீகாரங்களல்ல! இவையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டுமல்ல! ஏன்னா, அவரோட தாரக மந்திரம், ” ஆதரவற்ற, புத்திசுவாதீனமற்ற என் மக்களைக் காக்க வேண்டும்” என்பது மட்டுமே! ஆனா, உலகளவிலான இந்த அங்கீகாரம், அவருடைய தொண்டுக்கும், தொண்டு நிறுவனமான அக்ஷயாவுக்கும் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவரின் தற்போதைய பிரச்சினையான, மாதத்தின் மூன்று நாட்களுக்கு தேவையான 1200 பேரின் மூன்று வேளை உணவைத் தயாரிக்கத் தேவையான பணத்தை அவருக்கு பெற்றுத்தரவும், அவர் தொடர்ந்தும் தொண்டுசெய்யத் தேவையான பணத்தை பெறவும் உதவுமென்றே நம்புகிறேன். (மீதமுள்ள 27 நாட்களுக்கான பணத்தேவை, நம்மிடையேயுள்ள பல நல்லுள்ளங்களின் நன்கொடையினால் நிறைவேற்றப்படுகிறது!).
நாராயணன் கிருஷ்ணனின் நிகரில்லா சேவைக்கு நீங்களும் உதவலாம் :http://www.akshayatrust.org/

0 கருத்துகள்: