பெண் என்ற கருணை அடிப்படையில் கனிமொழி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், முன்னதாக கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக,
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும்
கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. இதனால், உச்சநீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்படும் பட்சத்தில், அவர் தொடர்ந்து சிறைக்குள் இருக்க நேரிடும் என்ற நிலை இருந்த காரணத்தால், இந்த வழக்கு குறித்த எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. கலைஞர் தொலைக்காட்சிக்கு சினியுக் நிறுவனம் கொடுத்த 214 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என்றும், கனிமொழி அரசியல் செல்வாக்கும், பணபலமும் மிக்கவர் என்பதால், அவரை ஜாமீனில் விடுவித்தால் அவர் ஆதாரங்களை அழிக்கக்கூடும் என்றும் சிபிஐ தெரிவித்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் சிங்வி மற்றும் சௌகான் ஆகியோர் கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர்.
எனினும், பெண்கள், குழந்தைகள், வயதானோர் ஆகியோருக்கு காட்டப்படும் கருணை அடிப்படையில் கனிமொழி மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அவ்வாறு கனிமொழி மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், முந்தைய ஜாமீன் மறுப்புகளை கருத்தில் கொள்ளாமல், சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக