கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த கலீல் சிஷ்டி என்ற 80 வயது முதியவரை விடுதலை செய்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் கலீல் சிஷ்டி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கலீல்
சிஷ்டி. 80 வயது முதியவரான இவர், ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த 1992 ஆண்டு முதல் ராஜஸ்தான் சிறையில் உள்ளார். மிகவும் முதிவராக இருப்பதாலும், உடல்நிலை மோசமடைந்து வருவதாலும், இவர் மீது கருணை கொண்டு, இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு இவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருந்தார் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்கண்டேய கட்ஜு.
இவரின் இந்தக் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அனுப்பியுள்ளார். சிஷ்டிக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு சிதம்பரத்துக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர். இந்நிலையில், கலீல் சிஷ்டியின் குடும்பத்தினர் அவருக்கு கருணை காட்டுமாறு அனுப்பிய கடிதத்தை ஏற்று, கலீல் சிஷ்டிக்கு கருணை காட்டுமாறு ராஜஸ்தான் ஆளுநர் சிவராஜ் பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட்.
ராஜஸ்தான் மாநில ஆளுநர் இந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கே அனுப்புவார் என்பதாலும், மத்திய உள்துறை அமைச்சகமே இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் என்பதாலும், ஏற்கனவே பிரதமர், உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருப்பதாலும், விரைவில் கலீல் சிஷ்டி விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக