ரிஷிவந்தியம்' தொகுதியில், விஜயகாந்த் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
`ரிஷிவந்தியம்' தொகுதியில் போட்டியிடுவதற்காக 23.5.2011 அன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக விழுப்புரம் சென்றேன். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜின் ஆட்கள், எனது வேட்பு மனுவை பறித்து சென்றனர். அதை தடுத்த எனது கணவரை கத்தியால் குத்தினர். உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். மறுநாள் அவசர அவசரமாக வேட்பு மனுவை தயாரித்து தாக்கல் செய்தேன். ஆனால் எனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துவிட்டார். வேட்பு மனுவில் என்னை பரிந்துரை செய்த, அந்த தொகுதி வாக்காளர்கள் 10 பேர் சரிவர கையெழுத்து போடவில்லை என்றும், வாக்காளர் பட்டியல் வரிசை எண் குறிப்பிடப்படவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களை காட்டி எனது மனுவை நிராகரித்தார். அந்த நேரத்தில் எனது கருத்துக்களை தெரிவிக்க 2 நாள் காலஅவகாசம் கேட்டேன். அதற்கு தேர்தல் அதிகாரி ஒப்புக்கொள்ளவில்லை.
தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளின்படி, தேர்தலில் போட்டியிடுவோரின் மனுவில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை சரிசெய்ய வாய்ப்பு தரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அந்த தொகுதி தேர்தல் அதிகாரி எனக்கு வாய்ப்பு தரவில்லை. அடுத்தநாள் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை அணுகி, எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்தேன். அதோடு மட்டுமல்லாமல், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி எனது மனுவை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை வைத்தேன். அதுபோல உத்தரவு எதையும் தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பிக்கவில்லை.
வேட்பு மனுவை நிராகரிப்பதற்கு முன்பு, அதை தாக்கல் செய்தவருக்கு மனுவில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்காமல் தள்ளுபடி செய்யக்கூடாது என்று, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனது விசயத்தில் அந்த உத்தரவின்படி தேர்தல் அதிகாரி நடந்துகொள்ளவில்லை. தே.மு.தி.க. வேட்பாளர் விஜயகாந்த் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார். இது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய செயலும் ஆகும். எனது மனுவை ஏற்றுக்கொண்டிருந்தால், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பேன். எனவே இந்த தொகுதி தேர்தலை ரத்து செய்யவேண்டும். எனது வேட்பு மனுவை நிராகரித்து ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். இந்த தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக