இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை, முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு ஈடாக கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 214 கோடிகள் எங்கே என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்த ஊழலால் மத்திய அரசுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் தலைமுறை
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு டிபி ரியாலிட்டி என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் சுமார் 214 கோடிகள் கொடுக்க முன்வந்தது. டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கு முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறிய சிபிஐ, அதற்க்கு ஈடாக இந்தப் பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியது. இது தொடர்பாக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது சிபிஐ. அதில் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், பங்குதாரர் கனிமொழி ஆகியோரைக் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டு அவர்களைக் கைது செய்தது.
இவர்கள் இருவரின் ஜாமீன் மனுக்கள் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்பொழுது சினியுக் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கியதாகக் கூறப்படும் 214 கோடிகள் எங்கே என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி. மேலும் இந்த ஊழலால் மத்திய அரசுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக