இன்றுள்ள நிலையில் கருணாநிதி ஸ்டாலினிடம் பொறுப்பை விட்டு விலகுவதே நல்லது என்றும் இதைவிட்டால் திமுக தன்னைப் புதுப்பிக்க வேறு வழி கிடையாது என்றும் தமிழக அரசியல் விமர்சகர் சோலை குறிப்பிடுகிறார். இது குறித்து வெளியான ஆய்வு வருமாறு :
தமிழக சட்டசபை தேர்தல் தீர்ப்பு எப்படி இருக்கும் என, ஏடுகளும், ஊடகங்களும் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன. ஆனால், ஓட்டுப்பதிவின் போது வீசிய அமைதிப் புயல், அந்த கணிப்புக்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு போய்விட்டது.”இந்த அளவிற்கு மகத்தான வெற்றி பெறுவோம் என, அ.தி.மு.க., அணி எதிர்பார்க்கவில்லை. ஏன்… “இந்த அளவிற்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும்’ என, தி.மு.க., அணியும் எதிர்பார்க்கவில்லை.
மக்கள் ஏன் மவுன புரட்சி செய்திருக்கின்றனர்?இரண்டு லோக்சபா தேர்தலிலும், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், தி.மு.க, தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., மிகப் பெரிய அதிர்ச்சியை சந்தித்திருக்கிறது.தி.மு.க.,வில், “தென்மண்டல அமைப்பு’ என்ற பிரிவு அறிவிக்கப்பட்டது. அதன் அமைப்பாளராக, கருணாநிதியின் மகன் அழகிரி அறிவிக்கப்பட்டார். உண்மையிலேயே இந்த ஏற்பாட்டை, தி.மு.க., தொண்டர்கள் விரும்பவேயில்லை. ஆனால், தென்மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பெறுவதற்கு, அழகிரியின் தலைமை தேவை என்று கூறினர்.தென்மண்டலத்திற்காக, மதுரையில் தனி ராஜாங்கம் நடைபெறுகிறது என்ற தோற்றம் வலுப்பெற்று வந்தது. அதை தடுப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ முடியவில்லை; அதன் எதிரொலியை, இந்த தேர்தலில் பார்த்தோம். மதுரை நகரில் மட்டுமல்ல, மாவட்டத்தின், 10 தொகுதிகளிலும், தி.மு.க., தோல்வி கண்டது.
ஒரு காலத்தில், தன் கோட்டையாக இருந்த மதுரை மாநகரை, மீண்டும் அ.தி.மு.க., கைப்பற்றியிருக்கிறது.அதற்கு என்ன காரணம்?தி.மு.க, மீது மக்கள் கொண்ட கோபமா?மதுரை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அண்ணாதுரை போட்டியிட்டார். அவர் ஒரு சாமான்ய தொண்டர். அவர் வாங்கிய ஓட்டுகள், 83 ஆயிரத்திற்கும் அதிகம். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர், செல்வந்தர் வீட்டு பிள்ளை. அவர் வாங்கிய ஓட்டுக்கள், 38 ஆயிரம் தான். எதற்காக இதை குறிப்பிடுகிறோம் என்றால், மதுரை மக்கள் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளவே!
எட்டு மாவட்டங்களை கொண்ட சோழ மண்டலத்தில், அ.தி.மு.க., 26 தொகுதிகளிலும், தே.மு.தி.க., மூன்று தொகுதிகளிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. தி.மு.க., ஏழு தொகுதிகளிலும், காங்கிரஸ், பா.ம.க., ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.திருவாரூர் தொகுதியில், கருணாநிதி, 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கரூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க., ஒவ்வொரு தொகுதியில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடுமையான போட்டி என சொல்லப்பட்ட, ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெயலலிதா, 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பொதுவாக, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், தி.மு.க., கோட்டையாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனாலும், இதுவரை கண்டிராத அளவிற்கு, இந்த தேர்தலில் தான், தி.மு.க., இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறது. அந்த அளவிற்கு, மக்கள் பல்வேறு காரணங்களால், அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்றனர். அந்த கோபத்தை, ஓட்டுச்சாவடிகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கொங்கு சீமையில், 2006 சட்டசபை தேர்தலிலும், அடுத்து வந்த லோக்சபா தேர்தலிலும், தி.மு.க., பெரிய வெற்றியை பெறவில்லை. அதற்கு, அந்தந்த மாவட்ட கழக தலைமைகள் மீது, மக்களும், கழக தொண்டர்களும் கொண்ட அதிருப்தி தான் காரணம்.”தொகுதியில், அமைச்சர்களின் புதல்வர்கள், சிற்றரசர்களாக வலம் வருகின்றனர்’ என்ற புகார்கள், அறிவாலயத்தை முற்றுகையிட்டன. நில அபகரிப்பு என்ற புகாரில், ஒரு அமைச்சர் பதவி இழந்தார்; மாவட்ட செயலர் பதவியையும் இழந்தார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அவர் மீண்டும் மாவட்ட செயலரானார். அதை அந்த மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கொங்கு சீமையில், இப்படி ஒரு பக்கம் அமைப்பு ரீதியாக தி.மு.க., பலவீனப்பட்ட நிலையில் இருக்கிறது.அந்த சீமை விவசாயத்தையும், தொழில் வளத்தையும் நம்பி இருக்கிற பூமி. நூறு நாள் வேலை திட்டத்தால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என, விவசாயிகள் வெதும்பினர்.இதற்கு கேரளம் ஓரு தீர்வு கண்டது. நூறு நாள் வேலை திட்டத்தையும், விவசாய பணிகளையும் இணைத்தது; நூறு நாள் வேலை திட்டமும் செயல்பட்டது. அதே சமயம், விவசாய பணிகளும் இடையூறு இன்றி நடந்தன. இதற்கு, மத்திய அரசின் அனுமதி தேவை. இங்கே, அனுமதி கேட்டதோடு நிறுத்திக் கொண்டனர்; தொடர் நடவடிக்கைகள் இல்லை.கடுமையான மின்வெட்டு, கொங்கு சீமையில் கொதிகலனாக்கிவிட்டது. அதனால், சில தொழில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது; தொழிலாளர்கள் வேலை இழக்கும் அவலமும் ஏற்பட்டது. திருப்பூர் சாயப்பட்டரை பிரச்னை தீராத தலைவலி தான்.
இப்படி, பல காரணங்கள், மக்கள் நலத்திட்டங்களின் சிறப்புக்களையே சீர்குலைத்துவிட்டன.வடமாவட்டங்களில், தி.மு.க., நல்ல வெற்றியையே எதிர்பார்த்தது. தி.மு.க., கூட்டணியில், ஒரு பக்கம், பா.ம.க.,வும், இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகளும் இடம் பெற்றன. கூட்டணியின் பிரதான பங்காளியாக, காங்கிரஸ் கட்சி, காட்சி தந்தது. ஆனால், இந்த கூட்டணி, வெற்றிக்கு உதவவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அணியில், பா.ம.க., அங்கம் பெற்றது. அந்த கட்சி போட்டியிட்ட, ஏழு தொகுதிகளிலும், அதை தோற்கடித்தது தி.மு.க., தான். ஆனால், அதே பா.ம.க., சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., அணிக்கு தாவியது. வடமாவட்டங்களில், பா.ம.க.,வின் ஓட்டு வங்கி, அதிகபட்சம் 5 சதவீதம் தான் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. அந்த கட்சிக்கு, எந்த மாவட்டத்திலும், முறையான கட்சி கிளைகளோ, அமைப்புக்களோ இல்லை. அந்த கட்சிக்கு, 30 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கி தந்தது.அதே போல, காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகளை ஒதுக்கி தந்தது. அந்த கட்சி ஒரு, பெருங்காயம் இருந்த “டப்பா!’ கோஷ்டி சண்டைகளுக்கு குறைவில்லாத ஒரு இயக்கம் அது.இப்போது, இக்கட்சிகளின் வலிமை என்னவென்று தெரிந்திருக்கிறது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த, 40 ஆண்டுகளாக, அந்த கட்சி இவ்வளவு அவமானகரமான தோல்வியை சந்தித்ததில்லை. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க.,விற்கு, மக்கள் இப்போது பாடம் புகட்டியிருக்கின்றனர்.தி.மு.க.,வுக்கு இவ்வளவு பெரிய இழப்பை தேடி தந்தது, காங்கிரஸ் கட்சி தான். அந்த கட்சிக்கு, 60 இடங்களை ஒதுக்க தி.மு.க., முன்வந்தது. ஆனால், டில்லியில் இருந்து முதலில், 61 இடங்கள் என்றனர். அப்போது, தி.மு.க.,வின் உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. 60 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கேட்கிறது. எனவே, தி.மு.க., கூட்டணியில் தொடர அதற்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம்.ஆகவே, மத்திய அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என்று, உயர்மட்டக் குழு அறிவித்து, அந்த முடிவை, தி.மு.க., செயல்படுத்தியிருக்க வேண்டும். காங்கிரஸ் உறவை உதறியிருக்க வேண்டும்.
ஆனால், கருணாநிதியின், உறவினர்களான இரண்டு மத்திய அமைச்சர்கள், சோனியாவை சந்தித்தனர்; அதன் பின், காங்கிரஸ் கட்சி கொடுத்த நிர்பந்தத்தை, தி.மு.க., ஏற்றுக் கொண்டது. அதனால், தி.மு.க., டில்லி அரசியலில் சூழ்நிலைக் கைதி என்ற எண்ணம் தான் மக்களுக்கு ஏற்பட்டது. ஈழப் பிரச்னையில், காங்கிரஸ் கட்சி மீது தமிழகம் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்கிறது என்பதை தி.மு.க., கணித்திருக்க வேண்டும். அந்த கோபம் தான், காங்கிரஸ் கட்சியை படுதோல்வியடைய செய்துள்ளது. அதன் பாதிப்பிற்கு, தி.மு.க.,வும் உள்ளானது.
இந்த தேர்தலில், விஜயகாந்தின், தே.மு.தி.க., பெற்ற வெற்றியை குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு முன் நடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி, இம்முறை, அ.தி.மு.க., அணியில் நின்று போட்டியிட்டது. அ.தி.மு.க., வெற்றிக்கு அவர்கள் பேருதவியாக இருந்தனர். 41 இடங்களில் போட்டியிட்ட, தே.மு.தி.க., 27 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கட்சியே, எதிர்க்கட்சி என்ற வரிசையில் அமருகிறது.பொதுவாக, இந்த தேர்தல் தீர்ப்பு குறித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் என்ன கருத்து சொல்லியிருக்கின்றனர்? “ஒரு குடும்ப ஆட்சிக்கு, மக்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்’ என்கின்றனர்.
இதை தி.மு.க., ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். கருணாநிதியை தொடர்ந்து ஸ்டாலின் என்பதை, மக்கள் ஏற்றுக் கொண்டனர்; தி.மு.க., தொண்டர்களும் ஒப்புக் கொண்டனர். அதை தாண்டி, இன்னும் சிலருக்கு, இன்னன்ன பொறுப்புக்கள் என்பதை எவரும் ஏற்கவில்லை. கட்சி, “லகானை’ ஸ்டாலினிடம் கொடுத்து, கருணாநிதி வழிகாட்ட வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள சோதனையில் இருந்து கட்சி மீள்வதற்கு, அதை தவிர வேறு வழி தெரியவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக