மின்வெட்டைத் தீர்ப்பது உட்பட முக்கிய விஷயங்களை நிறைவேற்றுவது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் பொறுப்பேற்ற இரண்டாவது நாளில், அவரவர் துறை சார்ந்த இடங்களில் நேரடி களஆய்வு நடத்தினர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சமூக நலத் துறை அமைச்சர் உட்பட பலரும் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு புதன்கிழமை சென்று ஆய்வு நடத்தினர்.
இதன்பின், மாலையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர். சுமார் இரண்டரை மணி நேரம் வரை கூட்டம் நடைபெற்றது.
திரையில் விளக்கம்: அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் ஒன்றரை ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதற்கு ஏற்றாற்போன்று ஒவ்வொரு திட்டத்தையும் எந்த வகையில் செயல்படுத்த வேண்டும்; எப்படி அமலாக்க வேண்டும் என்பன குறித்து அமைச்சர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.
அதற்கு அமைச்சர்களிடம் இருந்து எப்படிப்பட்ட ஒத்துழைப்பு தேவை என்பது பற்றியும் கூட்டத்தில் விளக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநராக பணியாற்றியவரும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் போது ஒவ்வொரு துறையைச் சேர்ந்த செயலாளர்கள், முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மின் தட்டுப்பாட்டைப் போக்க புதிய வழிமுறைகளை எப்படி கையாள்வது? புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது அதை எப்படி அமல்படுத்துவது, கண்காணிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப் படங்களுடன் காண்பிக்கப்பட்டதாக தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக