தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.5.11

உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியின் படுதோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உளவுத்துறை உண்மை தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்தது தான் முக்கிய காரணம்’ என்று தி.மு.க.,வினரே புலம்பி வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சியை பிடித்தபோது, மத்திய மண்டல ஐ.ஜி.,யாக ஜாபர்சேட் பணியாற்றி வந்தார். அவருடைய பணியைக் கண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஜாபர்சேட்டுக்கு உளவுத்துறை ஐ.ஜி., பதவி வழங்கினார். இதையடுத்து சென்னை சென்று பொறுப்பேற்ற அவர்
முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். கருணாநிதியிடம் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவராக மாறிவிட்ட ஜாபர்சேட், எப்போதும் முதல்வரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். இதற்காக நாட்டு நடப்புகளில் உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வந்தார். உளவுத்துறையினரை, குறிப்பாக, உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட்டை முழுமையாக அவர் நம்பியதால், நாட்டில் தி.மு.க.,வுக்கு சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது என்று கருணாநிதியும் நினைத்திருந்தார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின்னும், முன்னும் உளவுத்துறை மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில், இலவசங்கள், நலத்திட்டங்கள் மூலம் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றும், தேர்தலில் கண்டிப்பாக தி.மு.க., அணிக்கே வெற்றி கிடைக்கும் என்றும், முதல்வராக இருந்த கருணாநிதியிடம் உளவுத்துறையினர் அறிக்கை அளித்தனர். அது தவறான தகவல் என்று தெரிந்தே உளவுத்துறை போலீஸார் கொடுத்துள்ளனர். இல்லையென்றால் உளவுத்துறை உயர்பொறுப்பில் இருந்த ஜாபர்சேட் போன்ற உயர் அதிகாரிகளின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் என்று பயந்த கொண்டே தவறான தகவல்களை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் கருணாநிதியும், “எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம்’ என்று நம்பிக்கையுடன் இருந்தார். தன்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்களிடம் கூட மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்றும் கூறிவந்தார். ஆனால், ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது நிலைமை தலைகீழாக இருந்தது கண்டு, தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. அதன்பின்னரே உளவுத்துறை கொடுத்த தகவல் பொய்யானது என்று தி.மு.க., தலைமையே உணர்ந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., படுதோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உண்மை நிலையை மறைத்து, தவறான தகவல்களை உளவுத்துறை தெரிவித்தது தான், என்று தி.மு.க.,வினரே தற்போது வெளிப்படையாக பேசிவருகின்றனர். முக்கிய தி.மு.க., பிரமுகர்கள் கூறியதாவது: தலைவர் கருணாநிதி, உளவுத்துறையை முழுமையாக நம்பினார். குறிப்பாக ஜாபர்சேட் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டார். அது தற்போது தவறாகி விட்டது. உளவுத்துறை சரியாக செயல்பட்டு, அவ்வப்போது தலைவருக்கு உண்மை நிலையை தெரிவித்திருந்தால், இப்படிப்பட்ட படுதோல்வியை சந்தித்து இருக்க வேண்டியதில்லை. உளவுத்துறையை நம்பி தி.மு.க., மோசம் போய்விட்டது, என்றனர்.
ஸ்ரீரங்கத்தில் ஜெ., தோல்வி கணிப்பு: “ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெ., தோற்றுவிடுவார்’ என்று உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர்சேட் (லீவில் இருந்தபோதும்) முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார். அதை நம்பியே கருணாநிதி, தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் ஜெ., தோற்றுவிடுவார் என்று கூறிவந்தார். உளவுத்துறை இப்படி கூற காரணம் என்னவென்று விசாரித்தபோது, உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர்சேட்டும், அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயமும் மிகவும் நெருக்கம். ராமஜெயத்துக்கு முதல்வரிடம் நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக, ஸ்ரீரங்கம் தொகுதியில் ராமஜெயத்தின் பணியால், ஜெ., தோற்பார் என்று கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: