சென்னை : அமைச்சர் மரியம் பிச்சை மரணத்துக்கு காரணமான சரக்கு லாரியை, மேற்கு வங்க மாநிலத்தில் தமிழக சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிய டிரைவர், ஆந்திராவில் பிடிபட்டார். திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரியம்பிச்சை. மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 16ம் தேதி அமைச்சராக பதவி ஏற்றார்.
22ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். 23ம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.அதே நாளில், பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் வந்ததால், 22ம் தேதி அவர் திருச்சி சென்றார். மற்றொரு அமைச்சர் என்.ஆர்.சிவபதியுடன் முத்தரையர் சிலைக்கு 23ம் தேதி காலையில், மாலை அணிவித்து விட்டு, அங்கிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டனர். பாடலூர் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது அமைச்சர் மரியம்பிச்சை வந்த இனோவா கார் மோதியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் இருந்த மற்றவர்களுக்கு காயம் கூட ஏற்படவில்லை.
Ôஇந்த சம்பவம் சதி காரணமாக நடந்திருக்கலாம் என்று மக்கள் சந்தேகப்படுவதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதாகÕ அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கூடுதல் டிஜிபி அர்ச்சனா உத்தரவில், டிஐஜி ஸ்ரீதர், எஸ்.பி.ராஜேஸ்வரி ஆகியோரது தலைமையில் 20 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தடயவியல் நிபுணர்களும் அழைத்துச் செல்லப்பட்டு சோதனை நடத்தினர். கன்டெய்னர் லாரி அல்லது சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி மீது கார் மோதியிருக்கலாம் என்று கூறினர். அதனால், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சமயபுரம் செக்போஸ்ட்டில், அந்த நேரத்தில் கடந்து சென்ற லாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. செக் போஸ்ட்டில் லாரியின் முன் பகுதி வீடியோ எடுக்கப்படும். அதை வைத்து லாரியின் நம்பரை போலீசார் கண்டறிந்தனர்.
அதேநேரத்தில் விபத்தை நேரில் பார்த்த பாடலூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவி என்பவர் போலீசில் கூறும்போது, Ô‘வாகனத்தின் முன் பகுதியில் நீல நிறம் இருக்கும். லாரியின் எண்ணை வைத்து பார்க்கும்போது அது கேரளா அல்லது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். எனக்கு எண் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், அடையாளம் தெரியும். டாரஸ் வகை சரக்கு லாரிÕ’ என்றார். அவரிடம் செக் போஸ்ட்டில் எடுத்த லாரிகளின் போட்டோவை காட்டி விசாரணை நடத்தினர்.
அதில் முதல் கட்டமாக 140 லாரிகள் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டது. அதில் ரவி மற்றும் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரிகள் சொன்ன தகவல்கள் அடிப்படையில் 24 லாரிகளை தேடினர். அதில், கேரளா மற்றும் ஆந்திரா லாரிகளை தனியாக பிரித்து விசாரணை நடத்தினர். கடைசியாக 4 லாரிகள் இறுதி பட்டியலில் வைத்தனர். அந்த லாரிகள்தான் விபத்து நடந்த நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக சமயபுரம் செக் போஸ்ட்டை கடந்து சென்றவை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
பதிவு எண்ணை பார்த்தபோது 4 லாரிகளுமே ஆந்திராவை சேர்ந்தது என தெரிந்தது. இதனால் 4 தனிப்படைகள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனாவும், ஆந்திரா கூடுதல் டிஜிபியை தொடர்பு கொண்டு உதவிகள் கேட்டார். அதனால், 4 லாரிகளின் முகவரி கிடைத்தது. அதில் ஒரு லாரி, போலியான முகவரி கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. 3 லாரிகள் சரியான முகவரி கொடுக்கப்பட்டிருந்தன. அதனால் 3 படைகள் மற்ற 3 லாரி உரிமையாளர்களின் முகவரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஷேக் இமாம் சாகிப் என்பவரது வீட்டுக்குச் சென்றனர். அவரோ, அந்த லாரியை எடுத்துக் கொண்டு அசாம் மாநிலத்துக்கு பேப்பர் பவுடர் மூட்டைகளை ஏற்றிச் சென்றிருப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த லாரியில் தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக் கொண்டு டிரைவர் ரகமத்துல்லா வந்ததாகவும், ஆந்திர மாநிலம் ராயலசீமாவுக்கு அவற்றை கொண்டு சென்று இறக்கியதும் தெரியவந்தது. அதன்பின் லாரி உரிமையாளர் ஷேக் இமாம் சாகிப், பேப்பர் பவுடரை ஏற்றிக் கொண்டு அசாம் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிந்தது.
அதைத் தொடர்ந்து விஜயவாடாவில் வீட்டில் இருந்த ரகமத்துல்லாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடலூர் அருகே வந்தபோது தன்னுடைய டாரஸ் லாரியின் பின்னால், ஏதோ ஒரு கார் மோதியது. திரும்பி பார்த்தேன். பின்னால் சைரன் விளக்கு எரிந்தபடி கார்கள் வந்தன. அதனால், விஐபிக்கு முன்னால் வந்த எஸ்கார்டு கார் மோதியிருக்கலாம் என்று நினைத்து நிற்காமல் வந்து விட்டேன் என்றார்.
அவரை போலீசார் நேற்று மாலையில் கைது செய்தனர். நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் லாரி எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று டிரைவர் ரகமத்துல்லா மூலம் உரிமையாளரிடம் பேசியபோது, மேற்கு வங்க மாநிலம் பத்வான் மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. மேற்கு வங்க போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர். அதனால் லாரியை எடுத்து வரவும், உரிமையாளரை அழைத்து வரவும் தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர்.
விபத்து நடந்தது எப்படி? டிரைவர் வாக்குமூலம்
லாரி டிரைவர் ரகமத்துல்லா அளித்துள்ள வாக்குமூலம்:
நான் முறையாக டிரைவிங் கற்றுள்ளேன். தூத்துக்குடியில் இருந்து லாரியில் ஜிப்சம் ஏற்றிக் கொண்டு ஆந்திரா மாநிலம் ராயலசீமாவுக்கு புறப்பட்டுச் சென்றேன். நான் வேகமாக வரவில்லை. மெதுவாகவே வந்தேன். பாடலூர் அருகே லாரி வந்தபோது, பின்னால் சத்தம் எழுப்பியபடி கார் வந்தது. அதிகாலை என்பதால் வழக்கம் போலத்தான் ஓட்டினேன். சாலையின் நடுவில் சென்றேன். கார் வேகமாக வந்ததால், நான் இடதுபுறமாகத்தான் லாரியை திருப்பினேன். ஆனால், அதற்குள் லாரி மீது கார் மோதி விட்டது. திரும்பி பார்த்தேன். காருக்கு பின்னால் சைரன் பொறுத்தியபடி கார்கள் வந்தன.
இதனால் ஏதோ ஒரு விஐபியின் காருக்கு முன்னால் வந்த எஸ்கார்டு கார்தான் லாரி மீது மோதி விட்டது என்பதை உணர்ந்தேன். விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்த முடிவு செய்தேன். ஆனால், சைரைன் காரை பார்த்ததும் பயந்து விட்டேன். லாரியை வேகமாக இயக்கியபடி அங்கிருந்து வந்தேன். தமிழக எல்லைக்குள் என்னை மடக்குவார்கள் என்று நினைத்தேன். மேலும் எனக்கு குறுக்கு வழி எல்லாம் தெரியாது.
வழக்கம்போலவே, திருச்சி சமயபுரம், பாடலூர், திருமாந்துரை செக்போஸ்ட், உளுந்தூர்பேட்டை செக்போஸ்ட், வேலூர், சித்தூர் வழியாக ஆந்திரா சென்றேன். எங்கும் போலீசார் என்னைப் பிடிக்கவில்லை. அதனால் உரிமையாளரிடம் கூட எதுவும் தெரிவிக்கவில்லை. ராயலசீமா சென்று ஜிப்சத்தை இறக்கினேன். பின் லாரியை உரிமையாளரிடம் ஒப்படைத்தேன். அவர், பேப்பர் பவுடரை ஏற்றிக் கொண்டு அசாம் புறப்பட்டார். ஆனால் விபத்தில் இறந்தது அமைச்சர் என்பது எனக்குத் தெரியாது.
லாரியின் பின் பக்க ஓரமாகத்தான் கார் மோதியது. அதனால் உளுந்தூர்பேட்டை அருகே வந்ததும், லாரியில் இருந்து இறங்கி பார்த்தேன். பின்னால் விளக்கு பொறுத்தியிருந்தேன். எரிவது பின்னால் வரும் வாகனங்களுக்குத் தெரிவதற்காக விளக்கு மீது வாளி பொறுத்தியிருந்தேன். அது மட்டும் சேதமடைந்திருந்தது. விளக்கு உடைந்திருந்தது. அதை கழட்டி விட்டேன். வழியில் புதிய வாளி வாங்கி மாட்டிக் கொண்டு புறப்பட்டேன். லாரியில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
170 கி.மீ வேகத்தில் அமைச்சர் வந்த கார்
தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றி வந்த அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டாரஸ் லாரி, சமயபுரம் செக்போஸ்ட்டை அதிகாலை 6.04 மணிக்கு கடந்தது. அங்கிருந்து விபத்து நடந்த இடத்துக்கு அதிகாலை 7.10 மணிக்கு வந்தது. அதாவது, செக்போஸ்ட்டில் இருந்து விபத்து நடந்த இடத்துக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் 6 நிமிடம் ஆகியுள்ளது.
ஆனால் அமைச்சரின் இனோவா கார், சமயபுரம் செக்போஸ்ட்டுக்கு 6.58 மணிக்கு வந்துள்ளது. அங்கிருந்து 12 நிமிடத்தில் விபத்து நடந்த இடத்துக்கு வந்துள்ளது. அதாவது ஒரு மணி நேரம் 6 நிமிடம் அந்த தூதரத்தை கடக்க லாரி நேரம் எடுத்துக் கொண்டது. ஆனால் அமைச்சரின் கார் 12 நிமிடத்தில் அங்கு வந்துள்ளது. சுமார் 170 கி.மீ. வேகத்தில் கார் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
லாரி டயர் மார்க் மேற்கு வங்கத்தில் விசாரணை
விபத்து நடந்த இடத்தை சிபிசிஐடி போலீசார் பார்வையிட்டபோது லாரி டயரின் தடத்தை கண்டறிந்தனர். அதை தடய அறிவியல் சோதனை நடத்தினர். டிப்பர் லாரி போன்றவைதான் விபத்துக்கு காரணம் என்று தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் பிடிபட்ட லாரி டயரின் தடத்தை பார்த்தபோது ஒன்று போல இருந்தன.
மேலும், விபத்துக்கு காரணமான லாரி படத்தை இ&மெயில் மூலம் பெற்று அந்த லாரியும், அமைச்சரின் காரும் மோதினால் அமைச்சர் மரணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். ஆய்வுகள் அனைத்தும் பொறுத்தமாகவே இருந்தன. மேலும், லாரியின் பின்பக்கத்தை மேற்கு வங்க போலீசார் ஆய்வு செய்தபோது அமைச்சர் வந்த காரின் பெயின்ட் அதில் ஒட்டியிருந்ததை கண்டுபிடித்தனர். விளக்கு வைக்கப்பட்ட பகுதி உடைக்கப்பட்டிருந்ததால், லேசாக சேதமடைந்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
அதனால் விபத்துக்குள்ளான லாரிதான் என்பதை மேற்கு வங்க போலீசார் உறுதிப்படுத்தினர்.
குழப்பிய தடயவியல் துறை
தடயவியல் துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது கன்டெய்னர் லாரி மீது கார் மோதியிருக்க வேண்டும். லாரிக்கு பின்னால் பம்பர் இருந்திருக்க வேண்டும். பம்பர் மோதியதால்தான் அமைச்சரின் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். ஆனால், விபத்தில் கன்டெய்னர் லாரி மோதவில்லை. மோதிய லாரிக்கு பம்பரும் இல்லை. ஆனால் இது தெரியாமல் சிபிசிஐடி அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 5 நாளில் 800 லாரிகளை சோதனையிட்டனர். அந்த வழியாக வந்த 150 லாரிகளை சோதனையிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக