இந்த உண்மை என்பதற்கான சாட்சியங்களை முதலில் பார்க்கலாம். 1. 'அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில் சமச்சீர் கல்வி இந்த ஆண்டு தொடராது. நிறுத்தப்படுகிறது. அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சரியான சமச்சீர் கல்வி அமுலாக்கப்படும்' என்கிறது ஜெயலலிதாவின் அறிக்கை. 2. 'சமச்சீர் கல்வி கட்டாயம் அமுலாக்கப்படும்' என்கிறது கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அறிக்கை 3. 'இந்த கல்வி திட்டம் நல்ல திட்டம் இல்லை. எனவே தான் இது கைவிடப்படுகிறது' என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த பொதுநல வழக்கில் ஆஜராகி விளக்கம் சொல்கிறார் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.
ஆக...இதில் ஜெயலலிதா சொல்வது போல் இந்த திட்டம் தரமானதாக ஆக்கப்பட்டு பின் அமுலாக்கப்படுமா? அல்லது கல்வி அமைச்சர் சொல்வது போல் கைவிடப்படாமல் எப்போது அமுலாக்கப்படுகிறது என்ற காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்பட்டு விட்டதா? அல்லது இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே சொல்லி விட்ட பின்னால், நீதிமன்றத்தில் விளக்கமளித்த தமிழக அரசு வழக்கறிஞர் சொல்வது போல் " சமச்சீர் கல்வி நல்ல திட்டம்(!?) இல்லை என்பதால் கைவிடப்படுகிறதா? என்று ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களையும், பொதுமக்களையும் குழப்புகிறது இந்த மூவரின் அறிக்கைகளும்.
முதல்வர், அமைச்சர், அரசு வழக்கறிஞர் ஆகிய இவர்கள் மூவரில் எவர் சொல்வதை அரசாங்கத்தின் பதிலாக எடுத்துக் கொள்வது என்ற கேள்வி தான் இறுதியில் எஞ்சுகிறது? இந்த விவகாரம் தொடர்பில் தமிழக மக்கள் வழக்கமான மவுனத்தை காக்கின்றனர். மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஊடகவியலாளர்கள் தான் ஆட்சி என்ற கருவானது ஆரோக்கியத்துடன் வளர்கிறதா, ஊனத்தின் அறிகுறி தென்படுகிறதா என்பதை தொடர்ந்து கவனித்து வருபவர்கள். இவர்களிடம் தான் பொதுஜனங்கள் தங்கள் உண்டாக்கிய கருவான அரசின் வளர்ச்சி அல்லது தேய்வின் பரிமாணத்தை சொல்லி வருகிறார்கள். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் பெருவாரியான மக்களிடம் சமச்சீர் கல்வியில் இந்த ஆட்சி தெளிவான முடிவை அறிக்காமல் இப்படி குழப்பிக் கொண்டிருப்பது ஒரு வித சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
கல்வி, விவசாயம், மருத்துவம் என்ற மூன்றையும் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான துறைகளாக பார்க்கிறார்கள். தாங்கள் படிக்காவிட்டாலும் தங்களது சந்ததி நல்ல ஒரு கல்வியை பெற வேண்டும் என்பதற்காக நாளும் உழைத்து ஓடாய் தேயும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கம், உரத்திற்காக அரசு கொடுத்த பொட்டாசியம் குளோரைட்டை தீப்பெட்டிக்கு விற்றுவிடும் விவசாய அதிகாரிகளுக்கு மத்தியில் மண்ணை நம்பி பயிரை விதைத்து மக்களிடம் சேர்க்கும் விவசாயிகள், பரவும் நோய்களிடமிருந்து அரசு தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்கும் சாதாரண மக்கள். இந்த மூன்று துறைகளில் ஏற்படும் ஓட்டைகள் மிகப்பெரிய அளவில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு.
இதில் தற்போது சமச்சீர் கல்வியை பற்றிய விடயமானது, மக்களிடம் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் எழுந்திருக்கும் கேள்விகளை பார்த்தால், நடப்பது என்ன, நடக்கப் போவது என்ன என்ற இரண்டையும் வாக்களித்த பொது மக்களால் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பெற்றோர்களை சுரண்டும் தனியார் கல்வி நிறுவனங்களை திடமாக கண்டிக்க முன்வராமல், அந்த நிறுவனங்கள் கேட்டுக் கொண்டால் தான் அரசு கல்வி கட்டண விவகாரத்தில் தலையிடும் என்று ஜெயலலிதா அறிவித்திருப்பது தான். இது எப்படியிருக்கிறது என்றால், ஒரு வீட்டில் திருட வரும் திருடனை பிடிக்க திருடனே கேட்டுக் கொண்டால் தான் பொலிஸ் தலையிடும் என்று காவல் துறை சொல்வது போல் இருக்கிறது.
காவி உடை, கழுத்தில் ருத்ராட்சத்துடன் காணப்படும் இந்துத்துவா ஆசாமியான பால்தாக்கரேவிடம் ஒரு ஊடக ஆசிரியர் கேள்வியை முன்வைக்கிறார். சாதி பற்றி உங்கள் கருத்து என்ன என்பது தான் அந்த கேள்வி. அதற்கு பால்தாக்கரேவின் பதில், 'உலகம் முழுவதும் இரண்டே சாதிகள்' தான். ஒன்று பணக்கார சாதி, மற்றொன்று ஏழை சாதி. அவ்வளவு தான்.
இந்தியாவில் படிப்பிலும் கூட இந்த பணக்காரன், ஏழை பாகுபாடு தெளிவாக காணப்படும் வேறுபாடு. கோடீஸ்வர குழந்தைகளுக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளுடன், ஏராளமான நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி ஏ.பி.சி.டி கற்றுக் கொடுக்கும் அல்ட்ரா மாடர்ன் பள்ளிகள் ஒரு புறம். மற்றொரு புறத்திலோ, வானமே கூரையாக, வகுப்பறை என்ற ஒன்று எப்படி இருக்கும் என்றே தெரியாமல், தேய்ந்து போன எழுதுபலகைகளையே பல ஆண்டுகள் பயன்படுத்தும் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகள் என்று காணப்படுகின்றன.
இந்த அல்ட்ரா மாடர்ன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகள் நர்சரி படிப்பை முடிக்கும் நிலையிலேயே நுனிநாக்கு ஆங்கிலம் சரளமாக புரள வலம் வருகிறார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளோ தமிழை உச்சரிக்கவே திணறுவது சாதாரணம். இந்த அல்ட்ரா மாடர்ன் பள்ளி பாடங்களை பயிலும் குழந்தைகள் போட்டி தேர்வுகளிலும், அரசு எந்திரத்தில் உயர் அதிகாரிகளாக பணிபுரிவதற்கான தகுதியை பெறும் தேர்வுகளிலும் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். சில போட்டி தேர்வுகளில் இது போன்று நவீன பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தான் வெற்றி பெறும் நிலையும் இருக்கிறது என்பதும் ஒரு துரதிர்ஷ்டம்.
இந்த காரணத்தால் தனது குழந்தைக்கான உயர் வேலைவாய்ப்புகள் இந்த வித்தியாசத்தால் மறுக்கப்படுகின்றன என்ற எண்ணம் இயற்கையாகவே சாதாரண மக்களிடம் இருக்கிறது. இந்த நிலை இருப்பதால் தான், சில ஏழைகளும், நடுத்தரவர்க்கமும் தங்கள் குழந்தைகளும் இது போன்ற பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் சொத்துக்களை விற்று கூட இந்த பள்ளிகளில் இடம் வாங்குவதற்காக போட்டி போடுகிறார்கள். தங்கள் உழைப்பு எல்லாம் குழந்தைகளின் படிப்புக்கு போனால் கூட பரவாயில்லை என்ற ஒரு உந்துதல் இவர்களிடம் காணப்படுவதை தமிழக மக்களிடம் காணமுடியும்.
இங்கிலீஷ் மீடியத்தில் தன் பிள்ளை படிப்பதை மிகப்பெருமையாக பேசும் சராசரி மனிதர்களை எங்கும் பார்க்கலாம். இதை புரிந்து கொண்ட கல்வி தந்தைகள் தான் பல விதங்களில் மக்களின் பாக்கெட்டுகளை காலி செய்யும் வித்தையையும் கற்றுக் கொண்டு விட்டார்கள்.இவர்களுக்கு தோள் கொடுக்க அமெரிக்காவின் மெக்மிலன் உள்பட சில நிறுவனங்கள் இந்தியாவில் எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பாடத்திட்டங்களை அச்சடித்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருந்தன. இந்த நிறுவனங்கள் பள்ளி நிர்வாகங்களை சரிக்கட்டி மாணவ, மாணவிகளுக்கு 10 ரூபாய் பெறுமான புத்தகத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதுடன் வரும் லாபத்தில் குறிப்பிட்ட பங்கை பள்ளி நிர்வாகத்திற்கு கமிஷனாக வழங்கி விடுகின்றன.
இந்தியாவின் உயர்பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் என்று இந்திய ஆட்சியதிகாரத்தின் நிர்வாக பதவிகளின் உயர் அதிகாரிகளான ஐ.க்யூ எனப்படும் புத்திக்கூர்மை இருக்கிறதா என்பதை கண்டறிய தனி தேர்வு நடத்தி அதற்கென்று தனியாக ஆயிரக்கணக்கில் பணம் கறப்பதும் உண்டு. மாணவர்களை 20 வயதுக்குள்ளாகவே அதிமேதாவிகளாக ஆக்கி காட்டுகிறோம் என்ற பெயரில் இந்த அல்ட்ரா மாடர்ன் பள்ளிகள் பெற்றோர்களின் வருமானத்தில் பெரும் பங்கு சுரண்டி விடுவதை தங்கள் முக்கிய கொள்கையாகவே வைத்துக் கொண்டிருந்தன.
பள்ளியில் கராத்தே, குங்பூ, சிலம்பம், யோகா, தியானம், ஓவியம் கற்று தருகிறோம் என்று ஆயகலைகளையும் பயிற்றுவித்து விடுகிறோம் என்ற பெயரிலும் தனியாக பணம் வசூலிப்பதும் உண்டு. சீருடையை நாங்களே தருகிறோம் என்ற பெயரில் துணிக்கடைகாரர்களிடம் கமிஷன், காலுக்கு மட்டும் ஷ§, செருப்புகளை பள்ளியே தரும் என்ற பெயரில் செருப்புகடைக்காரர்களிடம் கமிஷன் என்று சகட்டு மேனிக்கு கமிஷன் மண்டிகளாக பள்ளியா என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு தமிழ்நாட்டில் பள்ளிகள் மாறிப்போயிருந்தன என்பது தான் உண்மை. இந்த வியாபாரத்தில் கிடைக்கும் கொழுத்த லாபத்தை பார்த்து ஏராளமான அரசியல்வாதிகள் ஆங்காங்கே பள்ளி, கல்லூரிகளை தொடங்கி கல்வி தந்தையாக மாறிப்போனார்கள். தி.மு.க ஆட்சியில் இருந்த மந்திரிகளில் பொறியியல் கல்லூரி சொந்தமாக இல்லாத மந்திரிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஆனால் இதே தி.மு.க ஆட்சிக்கு தான் சமச்சீர் கல்வியை கொண்டு வருவது பற்றியும் ஞானோதயம் பிறந்தது. குழந்தைகள் கற்றுக் கொள்வதில் வித்தியாசம் இருக்க கூடாது. வர்க்க பேதமில்லாமல் புகட்டப்படும் கல்வி என்பது சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது தான் சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி என்ற பாட முறையை கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு கொண்டு வந்தது. கல்வியாளர்கள், அறிஞர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் ஆகியோரை கொண்டு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை கொண்ட புத்தகங்களை அச்சடித்து அரசே பள்ளிகளுக்கு தருவது என்று முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6 வது வகுப்புகளில் இந்த புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் 1 ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த புத்தகங்கள் தரப்பட்டு முழுமையான சமச்சீர் கல்வி திட்டம் புகுத்தப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி அமைந்தது. பதவியேற்ற நிலையிலேயே தரம் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி நிறுத்தப்படுகிறது. புதிய கல்விக்குழு அமைத்து சமச்சீர் கல்வி தரம் உயர்த்தப்பட்டு அமுல்படுத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஜனநாயக இயக்கங்களையும், பொதுமக்களில் பலரையும், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இப்படியான தடை என்பது தமிழகத்தில் பெருமளவில் கொந்தளிப்பை என்பது ஒரு மாயத்தோற்றம் என்பதே உண்மை. சராசரியான மனிதர்களிடையே இதுபற்றிய உரையாடல் டீக்கடைகளிலும், திண்ணையிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அவர்களில் பெரும்பாலனவர்களின் விவாத முடிவு என்பது பல இடங்களில் சமச்சீர் கல்வியை நிறுத்தியது தவறு என்பதே.
சமச்சீர் கல்வி குறித்து சில கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் சொன்ன கருத்தை பார்க்கலாம்.
இஸ்ரோ விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குநர் களில் ஒருவரான மயில்சாமி அண்ணாதுரை, சமச்சீர் கல்வி குறித்து தெரிவிக்கும் போது, சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தியிருப்பது சரியா? என்றால் சரியல்ல என்பது எனது எண்ணம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அது ஒரு நல்ல தரமான கல்விக்கு வழிவகுத்திருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.தவறுகள் இருப்பின் அவற்றைத் தவிர்த்து முறைப் படுத்துவத்தை விடுத்து நிறுத்தியதால் அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல வாய்ப்பை நாம் கொடுக்கத் தவறுகிறோமோ? என்று தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இப்பொதுப்பாடத்திட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைக் களையுமாறும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள் கட்டமைப்பு பணிகளையும் பலப்படுத்தி கல்வியின் தரத்தை உயர்த்துமாறும் ஜனநாயக இயக்கங்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளன. இப்பின்னணியில் இந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஏழாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும் புதிய பொதுப்பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு சமச்சீர்கல்வி அமலாக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவும், கூடவே கல்வித்தரத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வல்லுனர்குழு ஒன்று அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக்கல்வியாண்டில் சமச்சீர்கல்வி முறையை நிறுத்தி வைப்பதாகவும் பழைய பாடப்புத்தகங்களையே பின்பற்ற வேண்டுமெனவும் இப்பின்னணியில் பாடப்புத்தகங்கள் அச்சிட வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதை ஜூன் 15-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்வித்தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே. ஆனால் இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கைவிடப்படுவதும் மாணவர்கள் மததியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள்-கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டும் அமலாக்கிக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும், பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரி செய்யுமாறும் வேண்டுகிறோம்.
இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை பலப்படுத்துமாறும், இதோடு தனியார் கல்விக் கட்டணக்கொள்ளையிலிருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சமச்சீர் கல்வி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு முதலில் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விவாதத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர், இத்திட்டம் நல்ல திட்டமல்ல எனவேதான் கைவிடப்படுகிறது என வாதிட்டுள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஒரே மாதிரியான பாடத் திட்டம் கல்வியைக் கெடுத்து விடும் என்பதை ஏற்க இயலாது.
சமச்சீர் கல்வித் திட்டம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், சமூகநீதியை நாம் காலங்காலமாக புறக்கணிப்பது போலாகும். சமச்சீர் கல்வி என்பது ஒரு கட்சி அல்லது ஆட்சியின் திட்டம் அல்ல. இதற்கென பல மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பொதுவான திட்டம். சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டுப் பாடல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.
புத்தகங்களில் பிழைகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. எந்த காலத்திலும் புத்தகங்களில் தவறுகள் இடம்பெறாமல் இருந்ததில்லை. அதை களைய முயற்சிக்க வேண்டுமே தவிர, கைவிடுவது ஆரோக்கியமானதல்ல. கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்பது மிகவும் அவசியமானது. எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக தனது கொள்கையை வெளியிட வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி
அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதுதான் திமுக நிலை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலையும் இதுதான்.
இதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் எடுத்த எடுப்பிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிவித்து விடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் கர்நாடகம், குஜராத், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன்பிறகுதான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென்று சமச்சீர் திட்டத்தைக் கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து, அதன் பிறகு அச்சடித்து அவற்றை விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா என்பதை அரசினர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதிமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போன்றவை சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருப்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து செய்யப்பட்ட முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே. சியாம்சுந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே.வாசுகி ஆகியோர் "சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. அட்வகேட் ஜெனரல் அரசுக்குத் தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
சமச்சீர் கல்விக்குழுவில் ஒரு உறுப்பினரும் கல்வியாளருமான எஸ்.எஸ். ராஜகோபாலன் கல்வி பற்றிய முடிவுகளில் பயிற்று மொழி போன்ற சிலவே அரசியல் சார்ந்தவை. மற்றவை ஆசிரியர்களும் கல்வியாளர்களும் எடுக்க வேண்டி யவை. பாடத்திட்டம் கல்வியாளர்களது பொறுப்பாகும். அரசியல் கலக்காது அவர்கள் ஆற்ற வேண்டிய பணியாகும்.
சமச்சீர் கல்விக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக நான் இருந்துள்ளதால், இன்று எழுந்துள்ள சில பிரச்சனை களை விளக்க விரும்புகின்றேன். ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு வாரியங்களைச் சார்ந்த மூத்த ஆசிரியர்களைக் கொண்ட உட்குழுக்கள் அமைக்கப்பட்டு, நான்கு வாரியப் பாடத் திட்டங்களையும் ஒப்பிடுமா றும், பொதுப் பாடத்திட்டம் வகுக்க வழிமுறைகளைக் கூறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டன. அந்த உட்குழுக்களின் அறிக்கைப்படி, பாடத் திட்டங் களிடையே பெருத்த வேறுபாடு ள் ஏதுமில்லை என்றும், ஒரு சிலவற்றில் மாநில வாரியப் பாடத்திட்டங்கள் கல்வியியல் கோட்பாடுகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பொதுப் பாடத் திட்டக் குழுக்களிலும் நான்கு வாரியத்தைச் சார்ந்த ஆசிரியர்களோடு கல்லூரி ஆசிரியர்களும் இணைந்து செயலாற்றியுள்ளனர். எனவே பாடத் திட்டங்கள் தரமற் றவை என்றக் குற்றச்சாட்டு தனிப் பட்டவரது விருப்பு, வெறுப்புகளினால் கூறப்படுவதே யாகும்.
உட்குழுக்கள் பொதுத் தேர்வு வினாத் தாள்களையும் அலசின. ஆங்கிலோ-இந்தியன், மெட்ரிக் தேர்வுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட வினாத் தாள்கள் இருந்த போதிலும் ஒரு தாள் கொண்ட மாநில வாரியத் தேர்வை விட அதிக சாய்ஸ் இருப்பது காணப்பட்டது.
இத்தகைய ஆய்வுகள், ஒப்பீடுகள் அடிப்படையில், நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட சமச்சீர்கல்வி பாடத் திட்டங்களை முடக்குவது சரியான முடிவல்ல. பாடநூல்களில் முந்தைய ஆட்சியாளரது படைப்புகள் இருப்பது ஏற்புடையதில்லை என்றால் அவற்றை நீக்கி விட்டு பொதுப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
சமச்சீர் கல்விக் குழுவின் முக்கிய பரிந்துரைகளான மழலையர் வகுப்புத் தொடங்கல், பொதுப் பள்ளிகளின் குறைகளை களைதல் ஆகியவற்றில் புதிய அரசு தக்க நடவடிக்கைகள் எடுப்பதே அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான பள்ளிக் கல்வி கிடைக்கச் செய்யும். தி.மு.க, அ .தி.மு.க ஆகியவற்றின் முந்தைய ஆட்சிகளில் அமைக்கப்பட்டப் பல்வேறு குழுக்களில் இடம் பெற்றவன் என்பதால் எனது கருத்துகள் அரசியல் கலப்பில்லாத தவை என்று உறுதிபடக்கூறுகிறேன்.
இப்படி தமிழகத்தில் இருந்து எழுந்துள்ள குரல்கள் எல்லாம்.சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டிருப்பதற்கு எதிராகவே உள்ளன. இந்த நிலையில் , தங்களை நம்பி வாக்களித்த ஏழை மற்றும் நடுத்தர அன்றாட கூலி வேலை செய்து தங்கள் குழந்தைகளையும் இந்த உலகில் ஆளாக்கி பார்க்க கல்வியை தரவேண்டும் என்று நினைத்து போராடும் அப்பாவி மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்காமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும். அதற்கு அரசின் இந்த முடிவைப் பற்றி எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும், மொழி அறிஞர்களும், பொதுமக்களும் கூறும் கருத்துக்களையும், அதில் இருக்கும் நிதர்சனமான உண்மைகளை சீர்தூக்கி பார்த்து மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே நடைமுறையில் நல்ல விளைவுகளை தரும்.
அப்படி தவறும் பட்சத்தில், ஜெயலலிதா மக்களுக்கு இனி செய்யப் போகும் இலவசங்கள், திட்டங்கள் அனைத்தையும் விட தடைசெய்யப்பட்ட சமச்சீர் கல்வி இந்த ஆட்சிக்கு ஒரு வெள்ளைத்தாளில் கரும்புள்ளியாக பளீரென்று எப்போதும் தெரியும் வகையிலும் ஆகக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இப்படியான சிறிய கரும்புள்ளிகளை தி.மு.க தலைவர்கள் கண்டு கொள்ளாத காரணத்தால் தான், தி.மு.கவின் வெள்ளை பக்கங்களை மறைத்தன என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக கல்வித்துறை என்பது மற்ற அனைத்து துறைகளையும் விட மக்களை எளிதில் உசுப்பேற்றக் கூடிய ஒரு துறை. இதை அரசு கவனமாக கையாள வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி அ.தி.மு.க வின் அரசின் முடிவுகளுக்கு பொருந்தி விடக்கூடாது என்பது மட்டுமே இந்த ஆட்சி நல்லாட்சி தரும் என்று நம்புபவர்களின் எண்ணமாக இருக்கிறது. காரணம், மேலே எழும்பிய கேள்வியில் இந்த மூவரில் யார் அரசின் பிரதிநிதி என்ற குழப்பமான முதல் கோணலை இவர்களின் வெவ்வேறான அறிக்கை காட்டி இருப்பது தான். இது கோணலா...இல்லை என்னவாக இருக்கிறது? விடை சொல்ல வேண்டியது ஆட்சியாளர்கள் தான்.
நன்றி:-4தமிழ் மீடியாவிற்காக ஆனந்த்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக