திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 27) சென்னையில் கூடுகிறது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி,
கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் புதன்கிழமை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசியல் ரீதியான முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 ஜி அலைக்கற்றை வழக்கில், கலைஞர் தொலைக்காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் ரூ. 200 கோடியும், வட்டியுடன் திரும்பச் செலுத்தி, அதற்கான வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உள்பட அனைத்தும் ஆதாரமாகத் தரப்பட்டுள்ளன. இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர, எவ்விதமான ஒளிவு மறைவோ சதியோ இல்லை என்பதைக் காட்டி நிரூபித்தும் இருக்கிறோம்.
வாங்கிய கடன் தொகையைக்கூட நேர்மையான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி ஒரு பங்குதாரர் என்ற முறையிலும், சரத்குமார் நிர்வாகப் பங்குதாரர் என்ற முறையிலும் விசாரிக்கப்பட்டனர். இதைப்போல கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் விசாரிக்கப்பட்டார்.
கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிற நிலையில் திமுக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிக்க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று 27-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியான உடனே சென்னை சிஐடி காலனியில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டில் திமுக முக்கிய தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க. அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன் பங்கேற்றனர்.
இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பொதுச் செயலாளர் க. அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறித்து கனிமொழியிடம் கருத்து கேட்டபோது அவர் பதில் கூற மறுத்துவிட்டார். நன்றி : தமிழ் மீடியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக