தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.11

ராமேசுவரத்தில் சூறாவளி காற்று 25 படகுகள் கடலில் மூழ்கியது: கோடிக்கணக்கில் சேதம்


ராமேசுவரம்,தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

ராமேசுவரத்தில் இரவு 9 மணிக்கு கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு
ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் தடையும் ஏற்பட்டது. மேலும் ராமேசுரம் அக்னி தீர்த்த கடல், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டது.

தற்போது மீன் இனப்பெருக்க காலம் என்பதால் படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பாலும், சூறாவளி காற்றாலும் நங்கூரங்கள் அறுத்துக் கொண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் 25 விசைப்படகுகள் கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது.

மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்தன. சூறாவளிக்காற்றில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பலத்த சேதம் அடைந்தன. ஒவ்வொரு படகிலும் சுமார் ரூ.4 லட்சத்துக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீன் பிடிக்க தடை விதித்துள்ளதால் வறுமையில் வாடும் மீனவர்களுக்கு இந்த சூறாவளிக்காற்றினால் ஏற்பட்ட சேதங்கள் அவர்களை கவலையடைய செய்துள்ளது.

நேற்று ஏற்பட்ட படகுகளில் சேதம் மட்டும் மொத்தம் ரூ.3 கோடிக்கு மேலாக இருக்கும் என கூறப்படுகிறது. சேதம் அடைந்த படகுகளை பல்வேறு அரசியல் கட்சியினர் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை கடல் மிகவும் அமைதியாக காணப்பட்டது. மேலும் சில இடங்களில் கடல் நீர் உள்வாங்கியது. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அக்னி தீர்த்த கடலில் வெப்பத்தை தணிக்க நீராடுகின்றனர். இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

0 கருத்துகள்: