இன்று தமிழ்நாடு,கேரளா,புதுச்சேரி 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாகும். காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மே 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு புதிய ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரியவரும்.
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் 2748 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 ஆகும்.
வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவுச் செய்வதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வாக்குகளை பதிவுச்செய்ய 62 ஆயிரத்து 461 கட்டுப்பாட்டு கருவிகளும், 66 ஆயிரத்து 799 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் பணியில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 749 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசில் பணியாற்றும் 12 ஆயிரத்து 918 பேர் மைக்ரோ பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில், மத்திய துணை ராணுவப் படையினர் 240 கம்பெனிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழக போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர் என ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும், அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குமிடையேதான் கடும்போட்டி நிலவுகிறது. தி.மு.க 119 தொகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க 160 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுத்தவிர வேறு சில கட்சிகளும் களத்தில் உள்ளன.
வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் தமிழக வாக்காளர்கள் சில காரியங்களை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். ஒவ்வொரு குடிமகனுடைய விலை மதிப்புடைய வாக்குகளை அரசியல் கட்சிகள் உங்கள் முன் கோரி நிற்கின்றன. அதேவேளையில், நமது சொந்த வாக்குகளின் மதிப்பை உணர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாத அளவுக்கு இரு கூட்டணி கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் நம்மை கட்டாயப்படுத்தும் சூழலுக்கு தள்ளி விட்டுள்ளனர். அங்கீகரிப்பதும், நிராகரிப்பதும் நாம் அளிக்கும் வாக்கின் மதிப்பில் அடங்கியுள்ளது. நாளை முதல் நம்மை ஆள்பவர்கள் யார்? என்பதுக் குறித்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அல்ல மாறாக, இதுவரை நம்மை ஆண்டவர்களின் பகையையும், எதிர்ப்பையும் நாம் வாக்குகளின் மூலம் பதிவுச்செய்து வருகிறோம். இரண்டு கூட்டணிகளையும் மாறி, மாறி ஆதரவு தெரிவிக்கும் தமிழக வாக்காளர்களின் எண்ணங்கள்தாம் தேர்தல் முடிவுகளாக வெளிவருகின்றன. இதனைத் தவிர கொள்கைகளையும், கோட்பாடுகளையும், நிகழ்ச்சி நிரல்களையும், நேர்மையையும், ஒழுக்கங்களையும் ஆய்வு செய்து வாக்களிக்கும் மனோநிலைக்கு தமிழர்கள் இதுவரை தங்களை தயார் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமாகும்.
தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் கட்சிகளை தவிர புதிதாக ஜாதி, மத பேதமின்றி, ஊழலுக்கெதிராக, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும், ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை வளம்பெற வேண்டும், நிர்வாகம் சீராக நடைபெறவேண்டும் என்ற நேர்மையான கொள்கைகளுடன் தேர்தல் களத்தில் போட்டியிடும் கட்சிகளை பார்த்து வாக்காளர்கள் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் வெற்றிப்பெற முடியுமா? என்பதாகும். வெற்றிப்பெற முடியாத வேட்பாளருக்கு வாக்களித்து எங்கள் வாக்குகளை நாங்கள் வீணடிக்க வேண்டுமா? என்ற மனோநிலைதான் வாக்காளர்களிடமிருந்து வெளிப்படுகிறது.
இரு கூட்டணிகளில் யாரோ ஒருவர் ஆட்சிக்கு வரப்போகிறார், யாராவது ஒருவருக்கு வாக்களித்தால் போதும் என்ற மனோநிலைதான் நம்மிடம் காணப்படுகிறது. வேண்டா வெறுப்பாக உபயோகிப்பதல்ல நமது வாக்குகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். நேர்மையையும், தூய்மையான அரசியலையும் அடிப்படையாக கொண்டவர்களை தேர்வு செய்வதில்தான் நமது வாக்கின் மதிப்பு அடங்கியுள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.
16 லட்சம் ரூபாய்தான் ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் செலவழிக்க வேண்டிய தொகை என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால், இரு கூட்டணிகளுமே பணத்தை வாரியிறைக்கின்றன. இரு கூட்டணிகளும் தங்களது வார்த்தை ஜாலங்களாலும், சில நடிகர்களை துணைக்கு பிடித்துக்கொண்டும், பணத்தை அள்ளி வீசியும், ஒருவரையொருவர் மாறி மாறி வசைபாடியும்தான் வாக்குகளை சேகரித்தனர். இனி வரக்கூடிய தேர்தல்களிலும் அவர்களுடைய பாணி இதுவாகத்தான் இருக்கும்.
மத சார்பற்ற, ஜாதி வெறிக்கு அப்பாற்பட்டவர்கள், பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும், பெரும்பான்மை ஜாதிகளுக்கும் ஆதரவாக நிலைப்பாட்டை மேற்கொள்வதே இரு கூட்டணி கட்சிகளின் வழக்கமாக மாறிவுள்ளது. இரு கூட்டணிகளில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை. மின்வெட்டும் தீராது. வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கப் போவதில்லை என்பது அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளே பறைசாற்றுகின்றன.
வாக்காளர்களை கையேந்துபவர்களாக மாற்றும் நோக்கிலேயே இலவசங்களை அள்ளி வீசி பரவசப்படுத்தியுள்ளனர் இரு கூட்டணி கட்சிகளும்.
ஊழலில் இரு கூட்டணியுமே சளைத்ததல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான். கடுமையான விலைவாசி உயர்வு, மக்களை அவதிக்குள்ளாக்கும் மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் என தி.மு.க மீதான அதிருப்தி இத்தேர்தலில் வெளிப்படுமா? என்பது மே 13-ஆம் தேதி தெரியவரும். அதேவேளையில் மாற்று அணியான அ.இ.அ.தி.மு.க வின் கடந்த கால ஆட்சி அடக்குமுறையும், ஊழலும் நிறைந்ததாகவே உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் ஆணவமும், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிலைப்பாடும், சிறுபான்மையினருக்கு எதிரான சிந்தனையும், ஹிந்துத்துவா பயங்கரவாத பாசிஸ்டுகளுடனான அவருடைய கூடிக்குலாவலும் அக்கட்சியின் மீது நடுநிலையாளர்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்துகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும், நேர்மையும் ஜெயலலிதாவிடம் முற்றிலும் மிஸ்ஸிங்.
இரு கட்சிகளுமே பாசிச பா.ஜ.கவுக்கு துணைநின்றவை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் ஜெயலலிதாவுக்கு பாசிசத்துடன் சற்று ஈர்ப்பு அதிகமே. இந்நிலையில் இரு கட்சிகளின் கடந்த கால நிலைப்பாடுகள், மதசார்பற்ற கொள்கை, நிர்வாகம், மக்கள் நலத்திட்ட பணிகள், வேட்பாளர்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்து வாக்களிக்கவேண்டியது தமிழக வாக்காளர்களின் கடமையாகும்.
இக்கூட்டணிகளை தவிர சில குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் புதிய கட்சிகளின் வேட்பாளர்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்களுடைய வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள், நேர்மை, பிரச்சார வியூகங்களை பார்த்திருக்கும் வாக்காளர்கள் துவேச உணர்வுகளை அகற்றிவிட்டு அத்தகைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டியது கடமையாகும். குறிப்பாக சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா என்ற தேசிய கட்சியும், மனித நேய மக்கள் கட்சி என்ற மாநில அளவிலான கட்சியும் 8 மற்றும் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இத்தொகுதியின் வாக்காளர்கள் இவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்கவேண்டியது கடமையாகும். இதனைப் பொறுத்தே இக்கட்சிகள் எதிர்காலத்தில் தங்களது பணிகளை முழுமையாக சமுதாயத்திற்கு ஆற்ற இயலும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உங்கள் வாக்கு எவரையும் வெற்றிப்பெறச் செய்யவோ, தோல்வியடைய செய்யவோ அல்ல. உங்களுடைய மனசாட்சிப்படி உங்கள் உள்ளக்கிடக்கைகளின் வெளிப்பாடாக வருங்காலத்தை இலட்சியமாக கொண்டு உங்களது வாக்குகளை பதிவுச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக