தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.4.11

தேர்தல் சீர்திருத்தத்திற்கும் போராடுவேன் காந்தியவாதி ஹசாரே சபதம்


“திரும்பத் திரும்ப ஊழல் செய்திடும் அரசு பணியாளர்களுக்கு மரண தண்டனை அளித்திட வேண்டும்; லோக்பால் மசோதா மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை இல்லையென தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லாத நபர் மசோதா தயாரிப்பு குழுவில் இடம்பெறக் கூடாது. அவர் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் லோக்பாலோடு மட்டும் நான் நிறைவடைந்துவிட மாட்டேன். தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்திடும் போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளேன்’
என்று, அன்னா ஹசாரே கூறினார்.
ஜன லோக்பால் மசோதா நிறைவேற்ற அரசு முன்வந்து, ஹசாரே பெற்ற வெற்றி மகத்தானது. அதை ஒட்டி, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அன்னா ஹசாரே பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:ஊழலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தேச துரோகிகள் ஆவார்கள். அரசாங்க பணத்தை கொள்ளையடித்து ஊழல் செய்பவர்களை சிறையில் தள்ள வேண்டும். திரும்பவும் ஊழல் செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும். திரும்பத் திரும்ப அவர்கள் திருந்தவில்லை எனில், அந்த ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை வழங்கிட வேண்டும். அப்போது தான் ஊழலை ஒழிக்க வழி பிறக்கும்.காந்திய தொண்டராக இருக்கும் நான் மரண தண்டனையை ஆதரித்து பேசுவது பிழையாக கூட தோன்றலாம். ஆனால், ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் ஊழல் செய்து சொத்து சேர்ப்பவர்களுக்கு, அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும் என நம்புகிறேன். அந்த தண்டனையை பார்த்த பிறகு தான், எல்லோருக்கும் தப்பு செய்வதற்கு தயக்கம் வரும்.
இப்போது அரசாங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் முழுவதையும் வீடியோ எடுத்திட வேண்டும். அந்த கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள்,வாதங்கள்,எதிர்வாதங்கள், தீர்வுகள் என எல்லாவற்றையுமே வீடியோ எடுத்திட வேண்டும். அப்போது தான் ஒளிவுமறைவு இருக்காது. எல்லாமே வெளிப்படையாக அமையும். ஒளிவுமறைவுகள் தான் ஊழலுக்கு முதல் காரணம்.மத்திய அமைச்சர் கபில்சிபல் ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது லோக்பால் மசோதாவை கிண்டல் அடித்துள்ளார். இந்த மசோதாவை கொண்டு வந்தவுடன் ஏழை எளிய மக்களுக்கு பள்ளிகளில் அட்மிஷன் கிடைத்துவிடுமா என்றும் ஏழைகளுக்கு மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி நல்லமுறையில் சிகிச்சை பெற்றுவிடுவார்களா என்றும் கேலி பேசியுள்ளார்.
அந்த மசோதாவை கேலியும் கிண்டலும் கலந்த தொனியில் பேசுவது மிகவும் துரதிஷ்டவசமானது. அவருக்கு லோக்பால் மசோதா மீது நம்பிக்கை இல்லை என்றால், மசோதா தயாரிப்புக் குழுவிலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது. அதைத் தான், அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்திட வேண்டியது அவசியம். இந்த தேர்தல் நடைமுறை சீர்திருத்தங்களும் லோக்பால் மசோதாவைப் போலவே பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையாகும். இதை இனிமேலும் தாமதப்படுத்துவது தவறு. எனவே லோக்பால் மசோதாவை நிறைவேற்றிய கையோடு, தேர்தல் நடைமுறை சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டுமென போராட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்

0 கருத்துகள்: