அமெரிக்காவின் அடுத்த வெளியுறவுத் துறை அமைச்சராக செனட் உறுப்பினர் ஜான் கெர்ரி பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.இப்பதவிக்கு கெர்ரியின் பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது. இதன் பின்னர் ஜான் கெர்ரியை வெளியுறவு அமைச்சராக செனட் சபை உறுதி செய்யும்.69 வயதாகும் கெர்ரி இப்போது, செனட் சபையில் வெளியுறவுக் குழு தலைவராக இருக்கிறார். அமெரிக்காவில் அதிபருக்கு அடுத்தபடியாக
வெளியுறவு அமைச்சர் பதவி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
விடைபெறுகிறார் ஹிலாரி:
இப்போது வெளியுறவு அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டன், அப்பொறுப்பை இரண்டாவது முறையாகத் தொடரப் போவது இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார். ஜனவரி 20ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.
வெளியுறவு அமைச்சராக தேர்வாகவுள்ள கெர்ரி, 2004ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோல்வியடைந்தார்.
கொலராடோ மாகாணத்தில் பிறந்த கெர்ரி, யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்க கடற்படையில் பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டு முதல் முறையாக செனட் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நீண்டகால அரசியல் அனுபவம் மிக்கவர்.
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரும், கெர்ரி வெளியுறவு அமைச்சராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் அனுதாபி: கெர்ரி, வெளியுறவு அமைச்சராவது இந்தியாவுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் அவர் பாகிஸ்தானின் அனுதாபி. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவர் அந்நாட்டுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்.
எனினும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் இந்தியத் தலைவர்கள் அவருடன் நட்பை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
வெளியுறவு அமைச்சர் பதவிக்காக ஒபாமாவின் முதல் தேர்வாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் இருந்தார். ஆனால், தனது பெயரை இப்பதவிக்கு பரிசீலிக்க வேண்டாம் என்று அவர் ஒபாமாவிடம் கூறிவிட்டார். குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர்கள் சூசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததே இதற்குக் காரணம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக