மலேசியாவில், பத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் குடியிருப்புகள் கட்டப்படுவது நிறுத்தப்படும்' என, அந்நாட்டு பிரதமர் நஜீப் உறுதியளித்துள்ளார். மலேசியாவின், செலாங்குர் மாகாணத்தில், உலக புகழ் பெற்ற பத்து மலை முருகன் கோவில் உள்ளது.இந்த கோவில் வளாகத்தில், உலகத்திலேயே மிகப்பெரிய முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. 272 படிகளை உடைய இந்த பத்து மலை, சுண்ணாம்பு கற்களால் ஆனது. தற்போது, இந்த மலையில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. குறிப்பாக, 29 அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
"குடியிருப்புகள் அதிகமானால், கோவிலின் தனித்தன்மை பாதிக்கப்படும்; எனவே, இங்கு குடியிருப்புகள் அமைவதை தடுக்க வேண்டும்' என, மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் பழனிவேல், பிரதமர் நஜீப் ரசாக்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தீபாவளி விழாவில் பங்கேற்ற பிரதமர் நஜீப் குறிப்பிடுகையில், "பத்து மலை குகை கோவில் பகுதியில், குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்குவதை, செலாங்குர் மாகாண அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் இந்த மாகாணத்தில் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்துவோம்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக