அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னி, பராக் ஒபாமா இருவரும், புதன்கிழமை ஒரே மேடையில் விவாதிக்கவுள்ளனர்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் 2013ஆம் ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு யார் அதிபர் என்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபா
மாவும், குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியும் அதிபர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். கடந்த சிலவாரங்களாகப் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், புதன்கிழமை முதன் முதலாக இருவரும் ஒரே மேடையில் நேரடி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.
1960ஆம் ஆண்டு முதல் அதிபர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதிப்பது நடைமுறையில் உள்ளது. 3 முறை இந்த நேரடி விவாதம் நடைபெறும்.
முதல் விவாதம், புதன்கிழமை டென்வர் நகரில் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில், பொருளாதாரம் மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்து இரு வேட்பாளர்களும் தத்தமது நிலைகளை விளக்குகின்றனர்.
2ஆவது விவாதம் அக்டோபர் 16ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. இதில், வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்து குடிமக்கள் கேள்வி எழுப்பவுள்ளனர். 3ஆவது மற்றும் இறுதி விவாதம் அக்டோபர் 22ஆம் தேதி ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது. இதில், வெளியுறவுக் கொள்கைகள் விவாதிக்கப்படவுள்ளன.
துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜோ பிடன், பால் ரயன் ஆகியோர், கென்டகி நகரத்தில் நேரடி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த விவாதங்களை, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஒருங்கிணைக்கின்றனர்.
இந்த விவாதங்களுக்காக இருதரப்பினருமே தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். முன்னதாக, அதிபர் ஒபாமா பிரசாரத்தின் போது, மிட் ரோம்னி வாதத்திறமை மிக்கவர்; நான் சுமார்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே போல், ரோம்னியின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவருமான பால் ரயன், ஒபாமா வாதத்திறமை மிக்கவர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக