பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈக்வடாரின் நட்பு நாடுகள் எச்சரித்துள்ளன.விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகம் அடைக்கலம் அளித்துள்ளது. அவரைக் கைது செய்ய பிரிட்டன்
போலீஸார் தூதரகத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். மேலும் அதிரடியாக உள்ளே நுழைந்து அசாஞ்சேவைக் கைது செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து ஆலோசிக்க தனது நட்பு நாடுகளுக்கு ஈக்வடார் அழைப்பு விடுத்திருந்தது. வெனிசுலா தலைமையிலான நட்பு நாடுகள் இதில் கலந்து கொண்டன. ஈக்வடாரின் கயாகுல் நகரில் இச்சந்திப்பு நடந்தது.
இதில் கலந்து கொண்ட கூட்டணி நாடுகள் பிரிட்டனை எச்சரித்தன. ஈக்வடார் தூதரகத்தின்மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பிரிட்டன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தன.
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிராந்திய நாடுகளும் ஈக்வடாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே ஈக்வடார் தூதரகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மக்களைச் சந்திக்க அசாஞ்சே திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தூதரகத்தை விட்டு வெளியேறினால் அவர் கைது செய்யப்படுவார் என்ற நிலை நீடித்து வருகிறது. இதனால் அவர் கட்டடத்தின் மேற்பகுதி அல்லது ஜன்னல் வழியே மக்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் விக்கிலீக்ஸ் எனும் இணையதளத்தை நிறுவி அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் அரசு ரகசியங்களை வெளியிட்டார். இதனால் அவர் மீது அந்த நாடுகள் கடும் கோபமடைந்தன.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டுப் பெண் அவர் மீது பாலியல் புகார் அளித்தார். பாலியல் வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்ற நிலையில் அசாஞ்சே ஈக்வடார் தூதரகத்தில் கடந்த ஜூன் மாதம் தஞ்சம் புகுந்தார். ஆனால், கடந்த வாரம்தான் அவருக்கு அடைக்கலம் அளிப்பதாக ஈக்வடார் அரசு அறிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக