பாகிஸ்தானில் குரான் பக்கங்களை எரித்ததாக 11 வயது கிறிஸ்தவ சிறுமியை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஜி,12 பகுதியில் உள்ளது உமரா ஜாபர். இந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ரிம்ஷா மசி. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இந்த சிறுமி, புனித குரான் புத்தகத்தின் பக்கங்களை எரித்ததாக சயத்
முகமது உம்மத் என்பவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரம்னா போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரிம்ஷாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர் கூறுகையில், டவுண் சிண்ரோம் என்ற மூளை வளர்ச்சி குறைபாட்டால் சிறுமி அவதிப்பட்டு வருகிறாள். மேலும், சிறுமி மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் செக்டார் ஜி,12 பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் வீடுகளை தீயிட்டு கொளுத்துவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால் பீதி அடைந்த பலர் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறி உள்ளனர். பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேசிய நல்லிணக்கத் துறை அமைச்சர் பால் பட்டி உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக