தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.8.12

முஸ்லீம்கள் என தவறாக நினைத்து அமெரிக்க சீக்கிய கோவிலில் துப்பாக்கி சூடு. கொலையாளியின் காதலி கைது.


அமெரிக்க சீக்கியர் கோவிலில், துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியின் முன்னாள் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஓக் கிரிக் பகுதியில், கடந்த 6ம் தேதி, சீக்கியர் கோவிலில் நுழைந்த மைக்கேல் பேஜ்,41, என்பவன் திடீரென, பக்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில், ஆறு பேர் பலியாகினர்; ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், மைக்கேல் பேஜ் கொல்லப்பட்டான். இச்சம்பவம் குறித்து,

அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மைக்கேல் பேஜ், முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.

சீக்கியர்கள் தாடி வைத்திருப்பதால் அவர்களை முஸ்லிம்கள் என, வெளிநாட்டினர் தவறுதலாக கருதுகின்றனர். நியூயார்க்கில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது கூட, அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களை முஸ்லிம்கள் என நினைத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதே முறையில் தான், தற்போது, சீக்கியர் கோவிலிலும் தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.
வெள்ளை இனவெறியனான மைக்கேல், முஸ்லிம்கள் மீது கொண்ட வெறுப்பால் தான், சீக்கியர்கள் கோவிலில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மைக்கேலுடன் தொடர்புடைய நபர்களிடம், எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மைக்கேலின் முன்னாள் காதலியான மிஸ்டி குக் வீட்டிலும், போலீசார் சோதனை நடத்திய போது, அவர் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளை இன வெறியர் குழுவில் மைக்கேலுடன், இந்த பெண்ணும் இணைந்து செயல்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த குருத்வாராவின் தலைவராக இருந்தவர் சத்வந்த்சிங் கலேகா,65. மைக்கேல் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, தன்னிடமிருந்த சிறிய வாளைக் கொண்டு அவனிடம் சண்டையிட்டுள்ளார். இந்த தருணத்தை பயன்படுத்தி, பக்தர்கள் பலர் தப்பித்துள்ளனர். கடைசியில், சத்வந்த் சிங்கையும், மைக்கேல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான். சத்வந்த் சிங் தைரியமாக செயல்பட்டதை, கோவிலில் இருந்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

0 கருத்துகள்: