வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக, வன்முறையைத் தூண்டும் வகையிலான, தகவல் மற்றும் படங்களை அழிக்க "பேஸ்புக்' நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.அசாமில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும், வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு, பல்வேறு வகைகளில் மிரட்டல் விடுக்கப்பட்டது.அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில், குறிப்பிட்ட சில இணைய தளங்கள்
மற்றும் சமூக வலைத் தளங்களில், தகவல்களும், படங்களும், கிராபிக்ஸ் செய்து, வெளியிடப்பட்டன. இதனால், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் வட கிழக்கு மாநிலத்தவர்கள், பீதியில் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் கும்பல் தான், இதுபோன்ற வதந்திகளை, இணையங்களில் உலவ விட்டதாக, கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக, வன்முறையை தூண்டும் வகையில், தகவல் மற்றும் படங்களை வெளியிட்ட, 250 இணைய தளங்களை முடக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை கண்டறியவும், சம்பந்தபட்ட இணையங்களை முடக்கவும், நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக, வன்முறையைத் தூண்டும் வகையிலான, தகவல் மற்றும் படங்களை அழிக்க முடிவு செய்துள்ளதாக, "பேஸ்புக்' நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். "இந்தியா மற்றும் அமெரிக்காவில் பணிபுரியும் "பேஸ்புக்' நிறுவன ஊழியர்கள், சர்ச்சைக்குரிய வாசகங்களை அழிப்பதில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இது போன்ற தகவல்கள் இடம் பெறாத படி அவர்கள் கண்காணித்து வருகின்றனர்' என, "பேஸ்புக்' நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக